அ.தி.மு.க., கவுன்சிலர்களை செயல்பட விடாமல் பொய் வழக்கு போடும் தி.மு.க; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Update: 2022-05-29 11:58 GMT

நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களை செயல்பட விடாமல் பொய் வழக்கு போடும் நிலையை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளில், சட்டப்பூர்வமாக நேர்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வரும் அ.தி.மு.க., உறுப்பினர்களை செயல்பட விடாமல் நசுக்கும் வேலையை ஒரு சில அதிகாரிகள் துணையுடன் மு.க.ஸ்டாலின் அரசு செய்து வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளில் அ.தி.மு.க., 11 இடங்களில் வென்றது. தி.மு.க., 8 கம்யூனிஸ்ட் 2 காங்கிரஸ் 1, சுயேச்சை 5 இடங்களில் வெற்றி பெற்றன. மார்ச் 4ம் தேதி நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.,வை சேர்ந்த சுதா பாஸ்கரன், 15 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். நகராட்சி கூட்டம், 90 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளும் கட்சியினர் நகராட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, நகராட்சி கூட்டத்தை நான்கு வாரங்களுக்குள் கூட்டும்படி, ஏப்ரல் 20ல் உத்தரவிட்டது. கடந்த 25ம் தேதி கூட்டம் நடத்துவதாக அதிகாரிகள் அறிவித்தனர். 24ம் தேதி தி.மு.க.,வினர் தூண்டுதலின் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகர் மனப்பாறை நகரச் செயலர் பவுன் ராமமூர்த்தி உட்பட 10 அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு எதிராக வன்கொடுமை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டியது.

மறுநாள் நகராட்சி கவுன்சிலர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்தனர். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. கடந்த 25ம் தேதி நகராட்சி கூட்டம் நடக்கவில்லை. எனவே, நகராட்சி தலைவருக்கு பதிலாக சிறப்பு அலுவலரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினரை செயல்பட விடாமல் தடுத்தால் அதற்கான விலையை விரைவில் தர நேரிடும். மணப்பாறை நகராட்சி விவகாரத்தில் இனியும் அடாத செயல்களில் ஆளும் கட்சியினரும் அதிகாரிகளும் ஈடுபட்டால், அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும். அரசை கண்டித்தும் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twitter

Image Courtesy:NewsBricks

Tags:    

Similar News