போராடும் செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - தி.மு.க.வுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவத் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 2015ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அருகே, ஜூன் 7ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வலுகட்டாயமாக தி.மு.க. அரசு கைது செய்துள்ளது.
பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்த தனி துறை உருவாக்கப்பட வேண்டும், 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 17 சதவீத அகவிலைப்படியை சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும், மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவத் தேர்வு வாரியம் நடத்திய, தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டிலிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். https://t.co/6Ui8xiBwfT pic.twitter.com/kNhWWtrdgq
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 14, 2022
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் பேச்சு நடத்தி, பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. அதுதான் ஜனநாயகம். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இதனைத்தான் வலியுறுத்தியது. அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு ஆதரவளித்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், செவிலியர்களின் கோரிக்கைள் நிறைவேற்றப்படும் என, தேர்தல் அறிக்கையில் தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தி.மு.க. ஆடசியில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராடிய செவிலியர்கள் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டுள்ளது.