தி.மு.க.வுக்கு காப்பியடிக்கிறது மட்டுமே தெரியும்: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!
மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து அதற்கு பதிலாக புதிய பெயர் வைப்பதில் தி.மு.க. சிறப்பாக செயல்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சியில் பா.ஜ.க. மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு மேடையானது தமிழக அரசின் சட்டசபை போன்று வடிவமைக்கப்பட்டது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் 8 ஆண்டுகளில் 11 கோடி பேருக்கு வீடு, குடிநீர், கழிப்பிடம் என்று அனைத்து வகையிலும் மக்களின் வாழ்வு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கு சொத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,600 மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கவுரவத்தை பிரதமர் மோடி அரசு வழங்கியுள்ளது. சிறு, குறு வியாபாரிகளுக்கு முத்ரா கடன் திட்டத்தின் மூலமாக ரூ.36 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கொப்பரைக்கு ஆதார விலையை கொண்டு வந்தது. அதே சமயம் கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.150 உயர்த்தப்படும். பொள்ளாச்சியில் தென்னை நார் வாரியம் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலமாக ரூ.1,200 கோடி ரூபாய் வர்ததகம் நடைபெற்றது. இது போன்று பல்வேறு நலத்திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் தமிழகத்தில் தற்போது கூட்டு பாலியல் பலாத்காரம், சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது. பெண்களை அச்சுறுத்தும் வகையில் கருமுட்டை விற்பனை என பல்வேறு விதமான குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து திட்டத்திற்கும் தி.மு.க. அரசு பெயர் வைத்துக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar