'இதுவரை யாரும் எடுக்க துணியாத நடவடிக்கையை நிர்மலா சீதாராமன் எடுத்துள்ளார்' - வானதி சீனிவாசன் புகழாரம் ஏன்?
இதுவரையில் நாட்டில் பதவி வகித்து வந்த மத்திய நிதியமைச்சர் எடுக்க துணியாத நடவடிக்கையை நிர்மலா சீதாராமன் எடுத்துள்ளார் என்று பா.ஜ.க. மகளிர் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது பற்றி தமிழ் முன்னணி நாளிதழான தினமணியில் வந்த தலையங்கத்தை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புத்திசாலித்தனமாகவும் சமயோசிதமாகவும் இதுவரை எந்த நிதியமைச்சரும் எடுக்கத் துணியாத முக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். அளவுக்கு அதிகமாக கொள்ளை லாபம் ஈட்டும்போது அதன் மீது வரி விதிப்பது என்பது புதிய அணுகுமுறை.
கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் மீது ரூ.6ம், டீசல் மீது ரூ.13ம் இந்திய அரசு ஏற்றுமதி வரி விதித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யின் மீது டன் ஒன்றுக்கு ரூ.23,250 கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
'வின்ட்ஃபால் டேக்ஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'கொள்ளை லாப தடுப்பு வரி' முதலீட்டின் அடிப்படையிலோ, கண்டுபிடிப்பின் அடிப்படையிலோ அல்லாமல், நிறுவனமே எதிர் பார்க்காத சந்தை நிலவரத்தால் கிடைக்கும் கொள்ளை லாபத்தின் மீது விதிக்கப்படுகிறது. ஓஎன்ஜிசி, ஓ.ஐ.எல்., ரிலையன்ஸ் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த காலாண்டில் எதிர்பாராமல் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 139 டாலர் என இருந்த நிலையில், இந்த நிறுவனங்கள் எதிர்பாராத லாபம் ஈட்டியதற்கு உக்ரைன், ரஷ்ய போர்தான் காரணம்.
2020, 21ம் ஆண்டைவிட கடந்த நிதியாண்டில் ஓ.என்.ஜி.சியின் லாபம் 258 சதவீதம் அதிகம். ஆயில் இந்தியா லிமிடெட் 123 சதவீதம் அதிக லாபம் ஈட்டியிருக்கிறது. தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் நயாராவும் ரஷியாவிலிருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய்யை, சுத்திகரித்து ஏற்றுமதி செய்ததில் மிகப்பெரிய லாபம் ஈட்டியிருக்கின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இந்த நிறுவனங்களுக்கு எதிர்பாராத கேட்பை (டிமாண்ட்) ஏற்படுத்தி பெரும் லாபத்தைப் பொழிந்திருக்கிறது.