'வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு 'பாரத ரத்னா' - தமிழக பா.ஜ.க அதிரடி தீர்மானம்!
தமிழக பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யாவிற்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மண்ணின் பாரம்பரிய விவசாய முறையான இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பது, மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து பல ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக செய்தவர் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்கள். இவர் காட்டிய வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் தற்போது இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய உன்னத வாழ்க்கை வாழ்ந்த நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு, நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க செயற்குழு இன்று கூடியது, அக்கூட்டத்தில் "நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும்"என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிவு செய்த ட்வீட்டில்" தாய் மண்ணை மனதார நேசித்ததற்காகவும் நம் மண்ணைக் காத்த நம்மில் ஒருவரான அய்யா நம்மாழ்வார் அவர்களுக்குப் பாரதத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நமது இந்திய அரசுக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும், வேண்டுகோள் விடுத்து கோடிக்கணக்கான விவசாயிகளின் சார்பாக தமிழ்நாடு மாநில பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பா.ஜ.க'வின் இச்செயல், தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.