அதியமான் மன்னர் கட்டிய கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளர் கட்டிய வணிக வளாகம்? மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் உள்ள புராதன சின்னமான சென்றாய பெருமாள் கோயிலை மறைத்து தொல்லியல் துறை விதிகளை மீறி தி.மு.க. நிர்வாகிகள் வணிக வளாகங்கள் கட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் புயலை கிளப்பியுள்ளது.
தருமபுரி அதியமான் கோட்டை கோயில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னமான சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலை மறைத்து விதிகளை மீறி தி.மு.க., நிர்வாகிகள் வணிக வளாகம் கட்டியுள்ளதாக தமிழக மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் மகாலிங்கம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அதியமான்கோட்டையில் தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் பைபாஸ் சாலையில் 8-வது கிலோமீட்டரில் வள்ளல் அதியமான் நினைவு சின்னமாக 3 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1000 வருடங்கள் பழமையான பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது.
இந்த இடம் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது ஆகும். தற்போது இந்த இடம் முழுவதும் சுற்றுச்சுவர் கட்டியதோடு, கோயிலை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தொல்பொருள் ஆய்வுத்துறை கோவிலை சுற்றிலும் நான்கு புறமும் 300 மீட்டர் நிலத்திற்கு எந்த கட்டிடங்களும் கட்டக்கூடாது என்றும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு கூடாது என்றும் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
மேலும், கோயிலை பராமரிக்க கோயிலுக்குள்ளே தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலகமும் அமைக்கப்பட்டு அங்கு ஒரு ஊழியரும் உள்ளார். இந்த தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தலைமை அலுவலகம் சேலம் ஆகும். இப்படிப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயில் மட்டுமின்றி அதியமான் என்ற மாபெரும் மன்னர் ஆண்ட பூமியில், ஒரே ஒரு தொன்மையான கோயில் என்றால் அது கோட்டை கோயில் என்றழைக்கப்படும் அருள் மிகு சென்றாய பெருமாள் திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோவிலில் இருந்து தருமபுரியில் இருக்கும் கோட்டை கோயில் முதல் மைசூர் வரையிலும் சுரங்கப்பாதை இருப்பதாகவும், அதை அப்போது ஆண்ட அதியமான் மன்னர் பயன்படுத்தியதாகவும், இப்பகுதியில் உள்ள முன்னோர்கள் கூறியுள்ளனர்.