பட்டமளிப்பு விழா மேடையில் அரசியல் - தி.மு.க., அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை பதில்!

Update: 2022-07-29 13:59 GMT

தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாக கருதுகிறோம்.

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம் என்றார். உண்மைதான், அது இன்று மட்டுமல்ல, 1967க்கு பின்பு மட்டுமல்ல, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அறிவாற்றலில் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர் நமது முன்னோர்கள். மேற்கத்திய கல்வி முறையே தமிழகத்தின் கல்வியின் தொடக்கம் என்று நம்பும் சிலரின் கவனத்திற்கு; 1800களின் தொடக்க காலத்திலேயே, திராவிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் வருவதற்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் கல்வி பயின்று வந்துள்ளனர் என்பதற்கான சான்று உள்ளது.

Full View

ஆனால், இன்றோ, தமிழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்ற உண்மையை அமைச்சர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம். தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2016ம் ஆண்டு 1,65417 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2020ஆம் ஆண்டு அது 85,747 ஆக குறைந்துவிட்டது. சுமார் 50 சதவீத வீழ்ச்சி. மேலும், 2021ஆம் ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வில் வெறும் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வந்தது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழக பொறியியல் கல்லூரியில் நுழைவோர் எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதன் வெளிப்பாடாகவே இது தெரிகிறது.

தனது உரையை முடிக்கும்போது உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமகிர சிஷா நிதி மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 6,664 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 2015ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 3,96,942 மாணவர்களுக்கு PMKVY திட்டத்தின் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். மீண்டும் ஒருமுறை, எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தமிழக அரசை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். என்றும் தேச பணியில். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News