வேலூர், விழுப்புரம் செல்லும் ஆவின்பாலை சென்னைக்கு திருப்பும் ஆவின் நிர்வாகம் - பால் கிடைக்காமல் திண்டாடும் மக்கள், சீர்கெட்டு நிற்கும் ஆவின் நிர்வாகம்!
சென்னையில் கடந்த வாரம் ஏற்பட்ட ஆவின் பால் தட்டுப்பாடு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பிற மாவட்டங்களில் இருந்து செல்லும் பால் விநியோகத்தை தடுத்து நிறுத்தி சென்னைக்கு வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பால் கொள்முதல் கடந்த ஓராண்டு காலமாக 10லட்சம் லிட்டருக்கும் மேல் குறைந்து போனதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் உற்பத்தி, விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதன் விளைவாக கடந்த வாரத்தில் முதலில் தென்சென்னை பகுதியில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது, அதன் பிறகு சென்னையில் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்க்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்க சார்பில் 'சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைக்கு பால் வரத்து குறைந்து போனதாலும், ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைகள் காரணமாகவும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது'என விளக்கம் கூறப்பட்டது.
ஆனால் அரசின் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால் விநியோகம் ஒன்றும் பாதிக்கப்படவில்லை சில இடங்களில் கோளறு ஏற்பட்டது அதனை சீர்செய்துவிட்டோம் என கூறி சமாளித்தார்.
ஆனால் உண்மையில் பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்த போராட்டத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் லிட்டருக்கு மேல் கொள்முதல் தற்போது குறைந்து நாள் ஒன்றுக்கு சுமார் 24 லட்சம் லிட்டருக்கு குறைவாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது, ஆனால் தமிழக அரசு ஆவின்பால் விற்பனை முறையாக நடக்கிறது எந்த பிரச்சனையும் இல்லை நாங்கள் அனைத்தையும் சரி செய்து விட்டோம் என பூசி மொழுக பார்த்தது ஆனால் உண்மையில் கள நிலவரப்படி பால் முறையான அளவில் விநியோகம் செய்யப்படவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு முறையான அளவில் பால் சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தற்பொழுது தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் தான் அதிக பால் மாதாந்திர அட்டைகள். சுமார் ஆறு லட்சம் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும் வசதி படைத்தவர், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் என வித்தியாசம் இல்லாமல் மாதாந்திர அட்டைகள் மூலம் ஆவின் பாலை வாங்கி வருகின்றன. அதனால் சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சனை பெரிதாகி விட்டதால் அதனை சமாளிப்பதற்காகவும், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவும் அருகில் உள்ள வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆவின் பால் பண்ணைகளில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் சென்னைக்கு கொண்டுவரப்படுவதால் தற்போது காலை எட்டு மணி நிலவரப்படி வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகம் முடங்கிப் போகிறது.