மலையை குடைந்து, இயற்கை வளத்தை சுரண்டி நடந்த அட்டூழியம் - பின்னணியில் திமுக அமைச்சரா?

Update: 2023-04-16 10:27 GMT

இயற்கை வளத்தை சுரண்டி நான்கு கிலோமீட்டர் தொலைவில் ரோடு போட்டதன் பின்னணியில் திமுக அமைச்சர் இருக்கிறார் என்ற விவகாரம் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சர்ச்சையில் சிக்காத அமைச்சர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்தளவிற்கு திமுக அமைச்சரவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இயற்கை மலையை சுரண்டி 4 கிலோ மீட்டருக்கு சொந்த பயன்பாட்டிற்காக ரோடு போட்டதாகவும் அதன் பின்னணியில் முன்னாள் வனத்துறை அமைச்சர் தற்பொழுதைய சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரனின் மற்றும் அவரது மருமகன் சிவகுமாருக்கு சம்மந்தம் இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு அருகில் மேடநாடு வனப்பகுதி உள்ளது. யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உட்பட வன விலங்குகள், இருவாச்சி போன்ற அரியவகை பறவையினங்கள், பூர்வீக சோலை மரக்காடுகள், குறிஞ்சிப் புதர்கள் எனச் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மேடநாடு உள்ளது. `மேடநாடு வனப்பகுதி' என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறையால் கண்காணிக்கப்படுகிறது. இந்த மேடநாடு பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்துக்கு சாலை இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலை அமைத்திருப்பதாக வனத்துறையினருக்குப் புகார் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டதில், சட்டவிரோதமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்தனர். அதையடுத்து, அனுமதி பெறாமல் நடைபெற்ற பணியில் ஈடுபட்ட எஸ்டேட் மேலாளர், கனரக இயந்திர ஓட்டுநர்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சட்டவிரோத பணிக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் கவுதம் கூறும்போது, 'சுற்றுலாத்துறை அமைச்சர் .ராமச்சந்திரனின் மருமகன் தேயிலைத் தோட்டம் இந்தப் பகுதியில் இருக்கிறது. இவரது தோட்டத்துக்குச் சாலையை இணைக்கும் வகையில், இடையில் வனப்பகுதியில் கைவிடப்பட்ட சாலையில் வனத்துறை அனுமதி பெறாமல் தடைசெய்யப்பட்ட இயந்திரங்களை கொண்டு சாலை விரிவாக்கம் செய்துள்ளனர். வனச்சட்டத்தின் அடிப்படையில் தோட்ட மேலாளர் பாலமுருகன், பொக்லைன் ஓட்டுநர்கள் உமர் ஃபாரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். எஸ்டேட் உரிமையாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.

இதற்கு காரணம் திமுக அமைச்சர் தான் என மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அடித்து கூறியுள்ளார், தனியார் யூ ட்யூப் நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கும் போது சவுக்கு சங்கர் கூறியதாவது, 'இதற்கு காரணம் திமுக அமைச்சர் கே.ராமச்சந்திரன்தான், இதனை எந்த ஊடகமும் பேசவில்லை. ஆனால் இயற்கை வளத்தை சேதப்படுத்தியதற்காக அந்த ஓட்டுனர் மற்றும் ஜேசிபி ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நான்கு கிலோ மீட்டருக்கு ரோடு போடும் அளவிற்கு குறைச்சலாக ஒரு 40 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவாகி இருக்கும். ஆனால் அந்த செலவை ஒரு ஜேசிபி டிரைவரும், லாரி டிரைவர் செய்திருப்பார்கள் என கூறுவதை ஏற்க முடியாது. பெரிய பொருளாதார ரீதியாக உதவி இல்லாமல் இதனை செய்ய முடியாது, மலையை குடைந்து ரோடு போடுவதை ஒரு வண்டி ஓட்டுநர் செய்தார் என கூறுவது நம்ப முடியாதது. எங்களை பார்த்தால் முட்டாள் மாதிரி தெரிகிறதா? திமுக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கவே இல்லை இது கண்டிப்பாக திமுகவிற்கு பின்னாலில் பெரிய ஆபத்தாக முடியும் எனக் கூறியுள்ளார்.

இயற்கை வளத்தை சுரண்டி 4 கிலோ மீட்டருக்கு சாலை போட்ட விவகாரத்தின் பின்னணியில் திமுக அமைச்சர் இருக்கிறார் என சவுக்கு சங்கர் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News