2 வருடத்தில் எண்ணற்ற முறை தடுக்கி விழுந்த தி.மு.க.. போதும், போதும் லிஸ்ட் பெருசா போகுது..?
தமிழகத்தில் திமுக இரண்டு ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்து இருக்கிறது. மே 7 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. அன்று முதல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தாங்கள் செய்து முடித்ததாக, குறிப்பாக 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக திமுக பொய்யாக தகவல்களை பரப்பி வருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வாக்குறுதிகளாக சுமார் 505 வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் சுமார் 80க்கும் குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தங்கள் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பிரச்சாரம் செய்துவருகிறது திமுக.
இரண்டு ஆண்டு கால ஆட்சியில் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் மற்றும் திமுக சந்தித்த சருக்கல்கள் பற்றி பார்க்கலாம் வாங்க. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி உயர்த்தவில்லை. ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றார்கள் அதையும் செய்து தரவில்லை. அ.தி.மு.க தான் ஏற்கனவே விவசாய கடன்களை ரத்து செய்தது. தி.மு.க. விவசாய கடன்களை ரத்து செய்யவில்லை. விவசாயத்திற்கு முக்கியத்துவம் தராமல் டாஸ்மாக் கடைகளுக்கு முக்கியத்துவம் தந்து அதிக அளவில் புதிய டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கிறது திமுக.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும், வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடுகின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலைவாய்ப்பு வழங்கப்படும், 3 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேறவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், 80 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கவும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய வழங்க படும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்களுக்கு தேர்தல் காலத்தில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. அது தற்போது வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.