நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ! பாதிக்கப்பட்டவர் புகார்!

Update: 2021-03-09 04:12 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றதில் நிலுவையில் இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இடித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.




கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கே.கே நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் ராஜேந்திரன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஊட்டி செல்லும் சாலை அருகே ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்த கட்டிடத்தை போலி ஆவணங்கள் மூலம் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார் சொந்தம் கொண்டாடுவதாக தெரியவருகிறது.

இதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராஜேந்திரன் தெரிவிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கட்டிடத்தை தான் வாங்கியதாகவும் ஆனால் அதனை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார் சொந்தம் கொண்டாடி வருவதாகவும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வரும் 17.03.2021 அன்று விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் அருண் குமார் இரவோடு இரவாக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி உள்ளார் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அருண்குமார் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அவர் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நில அபகரிப்புக்கு பெயர் பெற்ற தி.மு.க. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு செய்யமாட்டோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதியுடன் தெரிவிக்க முடியுமா என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் நேற்று கேள்வி எழுப்பி இருந்த நிலையில் இன்று நில அபகரிப்பு புகாரில் தி.மு.க. எம்.எல்.ஏ. அத்துமீறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : News J

Similar News