"ஸ்டாலின் ஆட்கள் என் வீட்டில் கல் எறிந்தனர், என் சேலையை பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தினர்" - குஷ்பு பகீரங்க குற்றசாட்டு!
"ஸ்டாலின் தன்னுடைய ஆட்களை அனுப்பி வீட்டில் கல் விட்டு அடித்தார்கள். சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர்" என தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது பகீரங்கமாக குற்றசாட்டை வைத்துள்ளார் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு.
ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு ஆதரவாக நேற்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள புஷ்ப நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய குஷ்பு, "கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க இந்த தொகுதியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இந்த முறை இங்கு நான் வெற்றிபெற்றால் அது மக்களின் வெற்றி. பெண்களின் பயத்தை போக்க நான் சட்ட மன்றத்திற்கு செல்ல நினைக்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க'வின் கோட்டை அல்ல. அ.தி.மு.க'வின் கோட்டை, பா.ஜ.க'வின் கோட்டை, கூட்டணி கட்சிகளின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இது தி.மு.க'வின் கோட்டை என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றிருக்க மாட்டார்" என கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தி.மு.க பேச்சாளர்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார்கள். முதலமைச்சர் தாய் மூன்று மாதத்திற்கு முன் இறந்தார். அவரைப் பற்றி தவறாக பேசியுள்ளார்கள். ஸ்டாலின் தன்னுடைய ஆட்களை அனுப்பி வீட்டில் கல் விட்டு அடித்தார்கள். சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன்" என பகீரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே நடிகை குஷ்பு தி.மு.க'வில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடதக்கது.