வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துசென்றது யார்? விசாரணையில் வெளிவந்த உண்மை!
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்து இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சில இடங்களில் வாக்குபதிவு இயந்திரங்கள் பற்றிய புகார் எழுந்தவண்ணம் இருந்தது. குறிப்பாக வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 'விவிபேட்' எனப்படும் வாக்கு இயந்திரத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதாக புகார் எழுந்து சமூக வலைதளம் முழுவதும் இதுபற்றிய புரளி எழுந்தது. இதனை தொடர்ந்து பல கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும் தங்களின் கட்சியினருக்கு வாக்குபதிவு இயந்திரங்களை பாதுகாக்குமாறு அறிவுரை அளித்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த வாக்குப்பதிவு இயந்திரமான 'விவிபேட்''டை எடுத்து சென்ற வாலிபர் யார் அவர் எதற்காக எடுத்துச்சென்றார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அந்த விசாரணையில் 'விவிபேட் இயந்திரத்தை எடுத்துச்சென்ற இருவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்களான செந்தில்குமார் மற்றும் வேளாங்கண்ணி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் செந்தில்குமார் சென்னை குடிநீர் வாரிய உதவி என்ஜினியராகவும், வேளாங்கண்ணி சென்னை மாநகராட்சி துப்புரவு மேஸ்திரியாகவும் பணியாற்றி வந்தனர் எனவும் அவர்கள் இருவரும் எடுத்து சென்றது மாற்று இயந்திரங்கள் என்பதும் அவை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படாதவை எனவும் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் விஷயம் என்னவென்றே அறியாமல் அதனை பற்றி தவறாக பரப்புரை செய்து ஊதி பெரிதாக்குவது அதிகரித்து வருவதால் எற்படும் குழப்பங்களை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.