கர்ணன் படம் பற்றிய உதயநிதியின் கருத்து - படைப்பாளியை மிரட்டுகிறதா தி.மு.க?

Update: 2021-04-14 06:45 GMT

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படமான "கர்ணன்" வெளியாகியது. இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்த படம் பரவலாக சினிமா ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்த நிலையில் இதுபற்றி தி.மு.க'வின் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள உதயநிதி, "'கர்ணன்' பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி" என குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு படைப்பாளிக்கு தனது படத்தில் என்ன கருத்து கூற வேண்டும் என்ற உரிமை உள்ளது. அதனை தெரிவிக்கும் போது அது தங்களின் ஆட்சியில் இல்லை, அ.தி.மு.க ஆட்சி என அதற்கும் அரசியல் சாயம் பூசி அதனை மாற்ற வேறு உதயநிதி சொல்லியிருப்பது படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை தி.மு.க பறிக்கிறதோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே தி.மு.க ஆட்சிக்காலத்தில் திரையுலகம் மிரட்டப்பட்டதையும், கருணாநிதி குடும்பத்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆக்கிரமித்ததையும், நடிகர்கள் மிரட்டப்பட்டதையும் எங்கே திரும்ப கொண்டு வர தி.மு.க துடிக்கிறதோ என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Similar News