உத்திரபிரதேசத்தில் 10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க முதல்வர் யோகி அதிரடி ஏற்பாடு

Update: 2022-04-16 10:45 GMT

உத்தரபிரதேச மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து அதன்மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை மாநிலத்திற்கு ஈர்க்க இலக்கு கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யும் இலக்குடன் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்யுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளை வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டார். உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத் துறையின் 11 துறைகளின் எதிர்கால செயல் திட்டம் குறித்த விளக்கக்காட்சியை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் யோகி ஆதித்யநாத் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 2018'ம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற உத்தரப் பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ரூ.4.68 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டன. இவற்றில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்கள் உத்திரபிரதேச மாநிலத்தில் செயல்படுத்தப்படுகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், உத்தரப் பிரதேசம் 'உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாட்டை' நடத்தவுள்ளது. இந்த முறை ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யும் இலக்குடன் செயல்பட வேண்டும்' என்று ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.

இந்த உச்சிமாநாடு புதிய உத்தரபிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு சிறகுகளை கொடுக்கும் எனவும் முதலீடுகளை ஈர்க்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரசு அதிகாரிகளால் முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்பட வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளார் முதல்வர் யோகி.

மாநிலத்தில் மூன்றாவது அடிக்கல் நாட்டு விழாவை அடுத்த 100 நாட்களுக்குள் நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டார். எளிதாக வணிகம் செய்வதில் தேசிய தரவரிசையை மேம்படுத்தும் குறிக்கோளுடன் 'டீம் யு.பி' செயல்படும் என்றும், அதற்காக முதலீடு மற்றும் வணிக விதிகள் மேலும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆதித்யநாத் கூறினார்.

மேலும், மாநிலத்தின் ஏற்றுமதியை ரூ.1.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்த 'டீம் யு.பி' திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆதித்யநாத் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.


Source - Swarajya

Tags:    

Similar News