தீபாவளிக்கு 100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்கு செயல்படக்கூடாது - மதுரையில் பொதுநல வழக்கு !
திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகள் பார்வையாளர்கள் அமர அனுமதி தந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வரும் நவம்பர் 3,4ம் தேதிகளில் திரையரங்குகளை மூட உத்தரவிடக்கோரி சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது கொரோனா பரவலை அதிகரிக்க செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் நவம்பர் 3,4 ம் தேதிகளில் திரையரங்குகளை மூட உத்தரவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.