கலைஞன் என்றால் நேர்மை வேண்டும் - சூர்யா அளித்த சம்பள பணத்தை விட்டெறிந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன்!
இப்படிப்பட்ட காசு வேண்டாம் என 'ஜெய்பீம்' படத்தின் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவிற்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் 'ஜெய்பீம்' திரைப்படத்தில் உண்மைக்கு புறம்பாக வன்னியர்கள் சமுதாயத்தை அவதூறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றதால் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தில் வசனங்களை வட்டார வழக்கில் திருத்தம் செய்து கொடுத்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ஜெய் பீம் படக்குழுவிடமிருந்து பெற்ற ஊதியத்தை திருப்பி கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
கண்மணி குணசேகரன் அவர்களின் அறிக்கை முழு விவரம் பின்வருமாறு, "திரைப்பட இயக்குநர் திரு த.செ.ஞானவேல் மற்றும் 2D ENTERTAINMENT நிறுவனத்தார் அவர்களுக்கு…
விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வியலில் இருப்பவன் நான். இச்சூழலில் வாசகராய் அறிமுகமாயிருந்த செந்தில் என்கிற தம்பி என்னை பார்க்க வருவதாய் (சுமார் இரண்டாண்டுகளுக்கு [சூலை 2019] முன்) சொல்லியிருந்தார். அதன்படிக்கு நான் வீட்டில் காத்திருந்த வேளையில் நாலைந்து பேர்களாய் நீங்கள் (த.செ.ஞானவேல்) என் இல்லம் (மணக்கொல்லை) வந்திருந்தீர்கள். உடன் வந்த செந்தில் தம்பி தங்களை 'இயக்குநர்' என்று எனக்கு அறிமுகப்படுத்தினார். எனது 'அஞ்சலை' நாவல் வாசிப்பின் மூலம் தொடங்கிய உரையாடல் மெல்ல தாங்கள் இயக்கவிருக்கும் திரைப்படம் பற்றி திரும்பியது. திரைப்படத்தின் கதையானது கம்மாபுரம் காவல்நிலையத்தில் வெகுசில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம். நானும் அதை கேள்விப்பட்டிருந்தேன். கதையின் களம் விருத்தாசலம், கம்மாபுரம் சார்ந்த பகுதி என்பதால் இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு வட்டார மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்குமென்றும் பிரதியில் மாற்றி உதவிட வேண்டுமெனவும் சொன்னீர்கள்.
எனக்கு திரைக்கதையாடல் பரிச்சயமில்லாத துறையென்பதால் சற்று தயங்கினேன். ஆனபோதும் ஊருக்கே வந்துவிட்டதில் என்னால் தட்ட முடியவில்லை. மேலும் (உண்மை நிகழ்வில் குறவராக இருந்தாலும்) ஆதுபாதற்ற வாயில்லா சமூகமாய் நைந்து கிடக்கும் சமவெளி பழங்குடியினரான இருளர்களின் வாழ்வை சொல்கிற படமென்பதால் வட்டார வழக்கு மாற்றத்திற்கு சம்மதித்தேன். எனக்கு காட்டப்பட்ட உரையாடல் பிரதியில் (திரைக்கதைப் பிரதி அல்ல) படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய "எலி வேட்டை" என்றே இருந்தது. இப்பகுதி சார்ந்த காட்சிகளின் உரையாடல்களும் சற்றேறக்குறைய இம் மக்களின் மொழிநடையாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு அமைந்தது. மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாக தெரியவில்லை. அந்த பெயர்களையும் சரிசெய்து கொள்வதாகவும் உறுதியளித்தீர்கள். படம் 'எலி வேட்டை' என பரிதாபம் கொள்கிற தலைப்பாக இருந்ததால் அதற்குமேலும் அந்த பிரதியில் நான் ஊன்றி கவனம் செலுத்தவில்லை. கூடுதலாய் ஒரு ஒப்பாரிப் பாடல் வேண்டுமென்றீர். நான் எழுதிக்கொடுத்ததை விடவும் இன்னும் ஆழமாக பாடலை எதிர்பார்க்கவும் நான் தவிர்த்துவிட்டேன். வட்டார உரையாடல் மாற்றம் தொடர்பான பணிக்கு தாங்களாகவே ரூ 50000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணம் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கச் செய்தீர்கள்.