சென்னையில் மெதுவாக மழைநீர் வடிவதால் இன்னும் 4 நாட்கள் வரையில் தண்ணீரில் மிதக்க வேண்டிய கட்டாயத்துக்கே பல இடங்களில் சென்னை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் சென்னை மாநகர மக்களை 3-வது முறையாக மழை வெள்ளம் முடக்கிப் போட்டது. கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளித்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையின் பல இடங்களில் குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள படூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், தையூர், முட்டுக்காடு, தாழம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளில் இருந்து வெளி யேறும் உபரிநீர் காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீர் முழுமையாக வடியாமல் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் பகுதியில் சுமார் 40 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்துமே நிரம்பி அதிகளவில் வெளியேறிய உபரி நீர் காரணமாகவே வெள்ளம் வடிவதற்கு தாமதமாகி இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், மேற்கு மாம்பலம் பகுதிக்குட்பட்ட போஸ்டல் காலனி, மூர்த்தி தெரு, மகாதேவன் தெரு, சுப்பிரமணியன் நகர் ஆகிய இடங்களிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நெசப்பாக்கம், திருவள்ளுவர் சாலை ஆகிய இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. கோயம்பேடு நியூ காலனி, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஆபிசர் காலனி ஆகிய இடங்களிலும் தண்ணீர் வடியாமல் உள்ளது.
இதுபோன்ற பகுதிகள் இன்னமும் தண்ணீர் வடியாமல் இருப்பதால் மக்கள் ஆளும் தி.மு.க அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதனை சரி செய்யவேண்டிய ஆளும் தி.மு.க அமைச்சர்களோ உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பரபரப்பாக உலாவுவதால் மக்களை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.