அதிகரிக்கும் கொரோனா, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு மட்டுமே தொடர வேண்டும்! - ராமதாஸ் வேண்டுகோள்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையின் தினசரி கொரோனாத் தொற்று நேற்று ஒரு நாளில் மட்டும் 51% அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அதனால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம்.
தமிழ்நாட்டில் தினசரித் தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் மட்டும் 120, அதாவது 19.38% அதிகரித்திருக்கிறது. சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. இவற்றில் 9 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சென்னையில் தினசரித் தொற்று 194 என்ற எண்ணிக்கையிலிருந்து 294 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி 105 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை இந்த மாதம் 29-ஆம் தேதி கிட்டத்தட்ட மும்மடங்காக, அதாவது 294 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் நேற்று மட்டும் தினசரி தொற்றுகளின் அளவு 73 விழுக்காடும், திருவள்ளூர் மாவட்டத்தில் 33 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமும், கவலையும் அளிக்கக்கூடியவை என்பதை மருத்துவர்கள் மறுக்க மாட்டார்கள்.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை தனித்துப் பார்க்க முடியாது. தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை உலக அளவில் அமெரிக்காவில் 4.65 லட்சமாகவும், பிரான்ஸ் 2.08 லட்சம், இங்கிலாந்து 1.83 லட்சம், ஸ்பெயின் 1 லட்சம் என்ற அளவில் பெரும் அலையாக பரவி வருவதையும், கேரளத்தில் சுமார் மூவாயிரம் என்ற அளவுக்கு அதிகரித்து இருப்பதையும் கணக்கில் கொண்டு தான் தமிழக தொற்று எண்ணிக்கை உயர்வை பார்க்க வேண்டும்.