அ.தி.மு.க அரசு அமைந்திருந்தால் மாதம் 1,500 ரூபாயும், இலவச வாஷிங்மெஷினும் கிடைத்திருக்கும் - ஆர்.பி.உதயகுமார்!
"அம்மாவின் அ.தி.மு.க அரசு அமைந்திருந்தால் எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்'ஸும் சாக்குப் போக்குச் சொல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம்தோறும் 1,500 ரூபாயும், இலவச வாஷிங்மெஷினும் வழங்கியிருப்பார்கள்" என கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
இன்று தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக பல எதிர்ப்புகள் எழும் வேளையில் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார் இது பற்றி கருத்து கூறினார். அவர் பேசியபோது, "கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி கொடுத்திருக்கிறோம். மேலும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை வழங்கியிருக்கிறோம். ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கினோம். உழவர்களுக்குப் பாதுகாப்புத் திட்டம், மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் எனப் பல திட்டங்கள், இப்படி மக்களின் வரவேற்பைப் பெற்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கிவந்தோம்.
தாய்மார்களுக்காக மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை இன்னும் நிறைவேற்றவில்லை.
அம்மாவின் அ.தி.மு.க அரசு அமைந்திருந்தால் எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்'ஸும் சாக்குப் போக்குச் சொல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம்தோறும் 1,500 ரூபாயும், அதேபோல் இலவச வாஷிங்மெஷினும் வழங்கியிருப்பார்கள். அதுதான் அம்மாவின் அ.தி.மு.க அரசுக்கும், தி.மு.க அரசுக்கும் உள்ள வித்தியாசம்" என்றார் ஆர்.பி.உதயகுமார்.
Image source - ANI