பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பாமக சார்பில் சென்னையில் இன்று சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Update: 2021-12-30 00:30 GMT

பாமக சார்பில் சென்னையில் இன்று சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதில் ---'2021-க்கு விடை கொடுப்போம்! 2022-ஐ வரவேற்போம்!! என்ற புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு'' கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அரசியல் தீர்மானம்:

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம்: மருத்துவர் அய்யா அவர்கள் காட்டும் வழியில் மக்கள் பணியாற்றி, பா.ம.க.வை வலுப்படுத்துவோம்!

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. மொத்தம் 23 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் உழைப்பு, மக்களின் நலனுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ஆற்றிய பணிகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.

Full View

சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியால் அதிக இடங்களில் வெற்றி பெற முடிய வில்லை என்றாலும் கூட, மக்கள் நலனுக்கான அதன் பணிகள் எந்த வகையிலும் குறையவில்லை. ஓர் ஆக்கப்பூர்வ அரசியல் கட்சிக்குரிய இலக்கணத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுதல் (Criticize), மாநில வளர்ச்சிக்காக புதிய யோசனைகளை வழங்குதல் (Creative), ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுதல் (Constructive) ஆகிய மூன்று 'சி'&க்களை கடைபிடித்து பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வழி நடத்திச் செல்கிறார். அந்த வகையில் தமிழ்நாட்டின் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ம.க. திகழ்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் நலன்கள், கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது அதற்கான முதல் குரல் மருத்துவர் அய்யா அவர்களிடமிருந்து தான் எழுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் ஆகியவை சார்ந்த பிரச்சினைகளில் மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவிக்கும் யோசனைகள் தமிழக அரசால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மருத்துவர் அய்யா அவர்களின் பல யோசனைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பா.ம.கவின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன.

அதே நேரத்தில் ஓர் அரசியல் கட்சியாக, பாட்டாளி மக்கள் கட்சி, அதன் செயல்பாடுகள் குறித்து இத்துடன் மனநிறைவு கொள்ள முடியாது. ஜனநாயகத்திலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அதன் இலக்கு ஆட்சியைப் பிடிப்பதாகத் தான் இருக்கும்; இருக்க வேண்டும். மக்களின் நலனுக்கான திட்டங்களை ஆட்சியாளர்களுக்கு யோசனையாக முன்வைத்து செயல்படுத்துவதை விட, அவற்றை நேரடியாகவே செயல்படுத்தும் இடத்தில் இருப்பதும், ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியாக இருப்பதை விட, தவறுகளே செய்யாத சிறந்த ஆட்சியை வழங்கும் இடத்தில் இருப்பதும் தான் ஓர் அரசியல் கட்சியின் உன்னத நோக்கமாக இருக்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கமும் அது தான்; அதைத் தவிர வேறொன்றுமில்லை.

Full View

அந்த இலக்கை அடையும் எண்ணத்துடன் தான் 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிடும் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி எடுத்தது. அத்துடன் 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறுவதற்கான வலுவான அடித்தளத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி அமைத்தது. 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதே நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்திருந்தால் அதன் வெற்றிவாய்ப்பு விகிதம் அதிகரித்து இருக்கலாம். ஆனால், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கான சமூக நீதியை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். அப்படி ஒரு முடிவை எடுத்ததில் எந்தத் தவறும் இருப்பதாக பா.ம.க. கருதவில்லை.

2021 தேர்தல் நிறைவடைந்து விட்ட சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் நமது நோக்கத்தை வென்றெடுப்பதற்கான அரசியல் பயணத்தை நாம் தொடங்கியாக வேண்டும். அதைத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் அடுத்தடுத்து தெரிவித்து வருகிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது சற்று கடினமான இலக்கு தான்; ஆனால் சாத்தியமாகாத இலக்கு அல்ல. அனைத்து பாட்டாளிகளும் கடுமையாக உழைத்தால் அந்த இலக்கை நம்மால் நிச்சயமாக எட்ட முடியும்.

தமிழக அரசியலின் பிதாமகர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அவரது சொல் தான் பாட்டாளிகளுக்கு வேதம். தமிழ்நாட்டின் நலனையும், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் அய்யா அவர்கள் எந்த முடிவையும் எடுப்பார். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் முன்னேற்றம் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியம். அந்த லட்சியங்களை வென்றெடுத்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். அதற்காக பா.ம.க. தலைமையில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்பதற்காகத் தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் தனி அணி அமைக்க வேண்டுமென மருத்துவர் அய்யா அவர்கள் விரும்புகிறார். 


தமிழ்நாட்டை பாட்டாளி ஆள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை எட்டுவதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் காட்டும் வழியில் பயணிக்க வேண்டும்; மக்களை மீண்டும், மீண்டும் சந்தித்து அவர்களின் ஆதரவை வென்றெடுப்பது; பாட்டாளி மக்கள் கட்சியை அனைத்து கிராமங்களிலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பா.ம.க. பொதுக்குழு உறுதியேற்றுக் கொள்கிறது.

--------------

தீர்மானங்கள்

தீர்மானம் 1: நீட் விலக்கு சட்டத்திற்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒப்புதல் பெற்று, 2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சமூகநீதியின் தொட்டில் என்று அழைக்கப்படுவதற்கான காரணங்களில் முக்கியமானது சமூகப்படிநிலையை காரணம் காட்டி காலம் காலமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த மக்களுக்கு, அதே காரணத்தைக் காட்டி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்குவது தான். அதில் பணக்கார, நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியாத ஊரக, ஏழை மாணவர்களுக்கு சம வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நுழைவுத்தேர்வுகள் கூடாது என்ற நிலையை உறுதியாக கடைபிடிப்பதும் ஒன்றாகும். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும் முக்கிய காரணம்.

மருத்துவப் படிப்பில் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கான வாய்ப்புகளை தடுத்து வரும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு, ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சுமார் நான்கு மாதங்களாகியும் இன்னும் அந்த சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுனர் ஒப்புதல் அளித்த பிறகு தான் மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களின் பரிந்துரை பெற்று இறுதியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியும். அடுத்தக்கல்வியாண்டு தொடங்க 6 மாதங்களே இருக்கும் நிலையில், இதே வேகத்தில் பணிகள் நடந்தால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காது.

அடுத்தக் கல்வியாண்டிலும் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தொடர்ந்தால் தற்கொலைகளும் தொடரும். அத்தகைய அவலநிலை இனியும் தொடரக்கூடாது. அதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி அளித்து தான் மக்களின் வாக்குகளை திமுக பெற்றது. அதனால், அடுத்த கல்வியாண்டிற்குள் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற்றுத் தருவதற்கான கடமையும், பொறுப்பும் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவுக்கு உண்டு.

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுவதன் மூலம் மட்டுமே இந்தக் கடமையிலிருந்து திமுக விலகிக் கொள்ள முடியாது. எனவே, தேர்தல் வாக்குறுதியைக் காக்கவும், சமூக அநீதியைப் போக்கவும் குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயித்து அதற்குள்ளாக நீட் விலக்கு பெற வேண்டும்; 2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று தமிழக பாமக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

--------------

தீர்மானம் 2: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க பா.ம.க. உறுதியேற்கிறது!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகம் என்றால் அது வன்னியர்கள் தான். வன்னியர் சமுதாயம் முன்னேறாத நிலையில், தமிழ்நாடு முன்னேறுவதற்கு வாய்ப்புகளே இல்லை. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் வன்னிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகத் தான், அவர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 42 ஆண்டுகளாக சமூகநீதி தொடர்போராட்டம் நடத்தி வரும் மருத்துவர் அய்யா அவர்கள், 1989-ஆம் ஆண்டில் வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கச் செய்து, அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.

வன்னியர்களைக் கொண்டு போராட்டம் நடத்தி, உயிர்த்தியாகம் செய்து பெறப்பட்ட 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டின் பயன்கள் வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை; வேறு பல சாதிகள் முறைகேடாக அந்த இட ஒதுக்கீட்டின் பயன்களை அனுபவித்து வருகின்றன. இந்நிலையை மாற்றி வன்னியர்களுக்கு உரிய சமூகநீதி கிடைக்க வசதியாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள், கடந்த 2020-ஆம் ஆண்டில் போராட்டத்தை தீவிரப்படுத்தியதன் பயனாகத் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை முந்தைய அரசு கடந்த 26.02.2021 அன்று கொண்டு வந்து நிறைவேற்றியது. அதை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தியது. வன்னியர் உள் இடஒதுக்கீட்டை தமது 42 ஆண்டு போராட்டத்தின் மூலம் சாத்தியமாக்கிய மருத்துவர் அய்யா அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாராட்டுகிறது.

42 ஆண்டு காலம் போராடிப் பெற்ற வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சமூகநீதிக்கு எதிரான சில சமூகங்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் அய்யா அவர்கள் உட்பட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சார்பில் மட்டும் மொத்தம் 4 மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் சார்பிலும் 4 மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த 16&ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நமது தரப்பு நியாயத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 10.50% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளும், அரசுத்துறைகளில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளும் செல்லும்; அவர்களை தொல்லை செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடுகளை பிப்ரவரி 15, 16 தேதிகளில் விசாரித்து தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை எதிர்கொள்ள மருத்துவர் அய்யா அவர்கள் சார்பிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் திறமையான புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் சார்பிலும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். வன்னியர்களின் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவதற்கான சட்ட காரணங்கள் அதிக அளவில் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் அவற்றை முன்வைத்து, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. அதற்கான சட்டப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு சமூக நீதியை நிலைநிறுத்த இப்பொதுக்குழு உறுதி அளிக்கிறது.

--------------

தீர்மானம் 3: அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தான் முழுமையான சமூகநீதியை நிலைநிறுத்த முடியும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி வன்னியர் சங்கத்தை நிறுவியபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதன்மையானது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதாகும். அதற்கான தேவை இன்று வரை தொடர்வதை எவரும் மறுக்க முடியாது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள் உள்ளிட்டோரின் கல்வி, வேலைவாய்ப்பு நிலைமையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள தொழில் சமூகங்களான நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குறும்பர் ஆகிய சமூகங்களின் நிலையும், குயவர், வேட்டுவக் கவுண்டர், ஊராளிகவுண்டர் ஆகியோரின் சமூக கல்வி நிலையும் மோசமாகவே உள்ளன. இந்த நிலையைப் போக்க தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் உள் இடஒதுக்கீடு / தொகுப்பு இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.

--------------

தீர்மானம் 4: தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்றவேண்டும்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளிலும், ஆசிரியர் பணிகளிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் தான் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து தேர்வு வாரியங்கள் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தாளில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத் தக்கது.

ஆனால், இந்த ஒரு நடவடிக்கையின் மூலமாக மட்டுமே பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்வதை தடுக்க முடியாது. இதற்கு முன் நடைபெற்ற அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழ் தெரியாத பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டு மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்ததை எவரும் மறந்திருக்க முடியாது. அதேபோல், இப்போதும் முறைகேடுகள் மூலம் பிற மாநிலத்தவர் தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சிபெற்று அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க ஒரே வழி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர முடியும் என்று சட்டம் இயற்றுவதுதான். இந்தியாவின் பல மாநிலங்களில் 100% மாநில அரசுப் பணிகளும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

அதேபோல், இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 70% முதல் 80% உள்ளூர்வாசிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில், தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழ்நாட்டவருக்கே வழங்கப்பட வேண்டும். இதற்கான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் கோருகிறது.

--------------

தீர்மானம் 5: துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்!

ஒரு மாநிலத்தில் அறிவு வளத்தை உருவாக்குவதிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவை. அவை தான் அறிவுத் தொழிற்சாலைகள். முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளிடம் தான் இருக்க வேண்டும். மாறாக, பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுனர் இருக்கிறார் என்பதற்காக, அனைத்து நிர்வாகமும் ஆளுனரின் கட்டுப்பாட்டில் மட்டும் இருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கும், பல்கலைக்கழக வளர்ச்சிக்கும் வழி வகுக்காது. அதுமட்டுமின்றி தேவையற்ற குழப்பங்களைத் தான் ஏற்படுத்தும். அத்தகைய குழப்பங்களை தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் சந்திக்கத் தொடங்கி விட்டன.

பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், ஆளுனருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படுபவை பல்கலைக்கழகங்கள் தான். ஆளுனரின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் முடங்கி விடக் கூடும். இந்தியாவின் பல மாநிலங்களில் இது நடந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது. அதற்காக பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மாநில அரசின் ஆளுகைக்குள் வர வேண்டும். இது தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும்.

பல்கலைக்கழக நிர்வாகம், துணை வேந்தர் நியமனம் உள்ளிட்டவற்றில் ஆளுனருக்கான அதிகாரத்தை குறைத்து, மாநில அரசின் பொறுப்புகளை அதிகரிப்பதற்காக சட்டங்கள் மராட்டியம், கேரளம், ஒதிஷா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாட்டிலும் துணை வேந்தர்கள் நியமனம், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியவற்றில் மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் பல்கலைக்கழக சட்டத்தை திருத்தும்படி தமிழக அரசை இக்கூட்டம் கோருகிறது.

--------------

தீர்மானம் 6: தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்கவேண்டும்

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் மழையால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் 3 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த அவலம் நிகழ்ந்தது. மழை வெள்ளத்தால் அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் இழந்தது உட்பட, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பின் ஒரு பகுதியையாவது ஈடுசெய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.5,000 அரசு வழங்க வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

--------------

தீர்மானம் 7: மழைவெள்ள பாதிப்பு - தமிழக அரசு கோரிய ரூ.4,626 கோடி நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்கவேண்டும்

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டம் ஆகியவற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழைப் பெய்துள்ளது. வேலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் மழையால் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. மழை & வெள்ளத்தால் தமிழ்நாட்டில் சாலை, மின்சார வாரியம் உள்ளிட்டவற்றின் கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மழை - வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவிடம் தமிழ்நாட்டில் மழை - வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக ரூ.4,626 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு, தில்லி திரும்பி ஒரு மாதத்திற்கு மேலாகியும் மழை - வெள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை. தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணம் உட்பட எந்த உதவியையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இது நியாயமற்றதாகும். தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டிய தேவை இருப்பதால், தமிழக அரசு கோரிய ரூ.4,626 கோடி நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

--------------

தீர்மானம் 8: சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மீண்டும் திணிக்கக்கூடாது!

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 276.50 கிலோ மீட்டர் தொலைவுக்கு 8 வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்காக அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர, சுமார் 7,000 உழவர்களுக்குச் சொந்தமான 6978 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்தத் திட்டத்திற்கு தடை விதித்தது. அதன் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றாலும்கூட, அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட முறை தவறு என்றும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உழவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு ஆணையிட்டது. அதன்படி, உழவர்களிடம் நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்தநிலையில், சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யும்படி தமிழக அரசை இதற்காக மத்திய அரசால் அமர்த்தப்பட்ட நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7 ஆயிரத்திற்கும் கூடுதலான உழவர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். சென்னை & சேலம் இடையே ஏற்கெனவே 4 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில், இன்னொரு நெடுஞ்சாலை தேவையில்லை.

எனவே, சென்னை & சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட எந்தப் பணியையும் மேற்கொள்ள இயலாது என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.

--------------

தீர்மானம் 9: பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!

ராஜீவ் கொலை வழக்கில் தவறுதலாக சிக்க வைக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனையைவிட இரு மடங்குக்கும் அதிகமாக 31 ஆண்டுகளாக சிறைகளில் வாடிவரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவை கடந்த 09.09.2018 அன்று நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பிறகும் அதன்மீது ஆளுநர் முடிவெடுக்காததும், இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு ஆளுநர் அனுப்பிவிட்டதாக மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் ஏற்கமுடியாதவை-. இவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை தாமதிப்பதற்காக மத்திய அரசு நடத்தும் நாடகமாகவே தோன்றுகிறது.

7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தியது தவறு என்றும், இந்த விசயத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும், உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதை தமிழக ஆளுநர் இனியும் தாமதிப்பது நியாயமற்றது ஆகும். மனித உரிமைகளை மதித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கோருகிறது.

--------------

தீர்மானம் 10: 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் மாதையன், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்!

தமிழ்நாடு அரசால் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட தண்டனை குறைப்பால் பயனடையாமல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரைப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்திருப்பதை பா.ம.க. பொதுக்குழு வரவேற்கிறது.

சிறைத் தண்டனை எனப்படுவது குற்றவாளிகளை திருத்துவதாக இருக்க வேண்டும். மாறாக, அவர்களின் மனித உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வழக்கமாக வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்றவர்கள் 14 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 7 அல்லது 10 ஆண்டுகளிலும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், அரசு விதித்துள்ள சில நிபந்தனைகளின் காரணமாக, வேறு பலர் 30 ஆண்டுகளைக் கடந்தும் விடுதலை பெறமுடியவில்லை. பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் சகோதரர் மாதையன் 34 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். அதே போல், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் பலர் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், விடுதலை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட தண்டனை குறைப்பால் பயனடையாத, உடல் நலம் பாதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரைக்க நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. நீண்டகாலமாக சிறையில் வாடும் மாதையன் மற்றும் இஸ்லாமியர்களை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

--------------

தீர்மானம் 11: பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் சட்டத்தை விரைவாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு இணையாக 21-ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதும், அதற்கான சட்டத்திருத்த முன்வரைவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. பெண்கள் அதிகம் படிக்க வேண்டும்; ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுபட வேண்டும்; பெண்களை போகப் பொருளாகவும், பணம் ஈட்டித் தருவதற்கான பிணையாகவும் பார்க்கும் நிலை மாற்றப்பட வேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காக பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும் என்றும் மருத்துவர் அய்யா அவர்கள் தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அந்த வகையில் இது மருத்துவர் அய்யா அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

அதேநேரத்தில் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் சட்டம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்தச் சட்டம் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிலைக்குழுவின் ஆய்வை விரைவாக முடித்து பெண்களின் திருமண வயதை 21&ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வேண்டுகிறது.

--------------

தீர்மானம் 12: சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேரை விடுவிக்கவும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை வேண்டும்.

தமிழ்நாட்டில் இராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 69 மீனவர்கள் அடுத்தடுத்த நாட்களில் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணம் செய்த 11 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மனித உரிமைகளை மதிக்காமல் கொடிய அத்துமீறல்களை அரங்கேற்றியுள்ளது. தமிழக மீனவர்கள் கொரோனா மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவர்கள் அனைவர் மீதும் கிருமிநாசினியை இலங்கை சுகாதாரத்துறைப் பணியாளர்கள் எந்திரம் மூலம் தெளித்துள்ளனர்; அது மனிதத் தன்மையற்ற செயல். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பிலும், பா.ம.க சார்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், மீனவர்கள் கைது செய்யப்பட்டு 12 நாட்களாகியும் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; தமிழ்நாடு, இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்களும் எல்லையைக் கடந்து மீன் பிடிக்க அனுமதிப்பதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கோருகிறது.

--------------

தீர்மானம் 13: கேரள அரசின் முட்டுக்கட்டைகளை தகர்த்து, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்!

முல்லைப்பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 7 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டபோதிலும், அது இன்னும் செயல்வடிவம் பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 7 ஆண்டுகளில் பலமுறை 142 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருப்பதன் மூலம், அணை மிகவும் வலிமையாக உள்ளது என்பது ஐயமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பேபி அணையை வலுப்படுத்தினால் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். இதற்காக பேபி அணையில் உள்ள சில மரங்களை வெட்ட கேரள அதிகாரிகள் அனுமதி அளித்திருந்த நிலையில், அதை கேரள அரசு ரத்து செய்துவிட்டது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். கேரளத்தின் இந்த அத்துமீறல் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து, பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட தமிழக அரசு அனுமதி பெற வேண்டும். அதன்பின்னர், பேபி அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

--------------

தீர்மானம் 14: காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!

இந்தியாவின் வற்றா நதிகளில் ஒன்றான கோதாவரி ஆற்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வீணாக கடலில் கலக்கும் 1,100 டிஎம்சி தண்ணீரில் ஒரு பகுதியை காவிரியில் திருப்புவதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களை மீண்டும் வளம் கொழிக்கும் பகுதிகளாக மாற்ற முடியும். தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் வகையில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை ரூ.86 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காததால் தாமதமாகிறது.

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டால் கூட, நிறைவேற்றி முடிக்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் எனும் நிலையில், உடனடியாக திட்டப் பணிகள் தொடங்கப்பட வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்களின் மாநாட்டை உடனடியாக கூட்டி, காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை இறுதி செய்து அறிவிக்க வேண்டும்; நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

--------------

தீர்மானம் 15: தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் மிகப்பெரிய சாபக்கேடுகளில் முதன்மையாக இருப்பது மதுப் பழக்கம் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவிலேயே முதன் முறையாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தியது தமிழ்நாடு தான். அது நமக்குப் பெருமை. ஆனால் இன்று இந்தியாவிலேயே குடிப்பழக்கத்தால் அதிகம் சீரழியும் மாநிலம் தமிழ்நாடு தான். இது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வெட்கி தலை குனியும் விசயமாகும்.

தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் 200க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார். மதுப்பழக்கத்தால் இளைய தலைமுறையினரும், இலட்சக்கணக்கான குடும்பங்களும் சீரழிந்து வருகின்றன. தமிழ்நாட்டின் வளர்ச்சியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 ஆயிரம் மதுக்கடைகளை மூடி, அடுத்த 3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசை பா.ம.க. கோருகிறது.

--------------

தீர்மானம் 16: தமிழ்நாட்டில் ஓமைக்ரான் கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்!

ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ், அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களைக் கடந்து, இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. டெல்டா வகையை விட ஓமைக்ரான் வகை கொரோனா 70 மடங்கு வரை வேகமாக பரவக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் பாதிப்பு டெல்டா அளவுக்கு பயங்கரமாக இருக்காது என்பது தான் ஆறுதல்.

தமிழ்நாட்டில் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 29 பேர் முழுமையாக குணமடைந்து விட்ட போதிலும், ஓமைக்ரான் பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ், 15 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி செயல்படுத்த வேண்டும். கொரோனா சோதனைகள், தடுப்பூசி செலுத்தல் ஆகியவற்றை அதிகரிக்கவும், ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான கட்டமைப்புகளை தயார்நிலையில் வைத்திருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்படி பா.ம.க. கோருகிறது.

அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும்படி இப்பொதுக்குழு அறிவுறுத்துகிறது.

--------------

தீர்மானம் 17: 2022ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கான திண்ணைப் பிரச்சார ஆண்டாக கடைபிடிக்கப்படும்!

தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காக பாடுபடுவதிலும், பொதுமக்களின் பிரச்னைகளுக்காக போராடி தீர்வு காண்பதிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணை வேறு எந்தக் கட்சியும் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை மற்றும் தொண்டர்களின் உழைப்புக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது வருத்தத்துடன் ஏற்கவேண்டிய உண்மை.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கான காரணம் மக்களுக்காக பா.ம.க. செய்த நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பதும், பா.ம.க.வுக்கு எதிரான பிற கட்சிகளின் அவதூறு பரப்புரைகள் முறியடிக்கப்படவில்லை என்பதும் தான். மக்களுக்காக ஆயிரம் நன்மைகள் செய்தாலும்கூட, அதை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதன் மூலம் தான் மக்களின் ஆதரவையும், வாக்குகளையும் பெற முடியும். இதற்காக திண்ணைப் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, மருத்துவர் அய்யா அவர்களின் அறிவுரைப்படி, 2022ஆம் ஆண்டை பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கான திண்ணைப் பிரச்சார ஆண்டாக கடைபிடிக்க இந்தப் பொதுக்குழு உறுதி ஏற்கிறது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் மிக அதிக அளவில் வெற்றிகளை குவிக்க கடுமையாக உழைக்கவும் பா.ம.க. பொதுக்குழு உறுதியேற்கிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News