மக்களவையை அலங்கரிக்க இருக்கும் 280 புதிய எம்.பி.க்கள்.. 2019-யை பின்னுக்கு தள்ளிய 2024 தேர்தல்..
இந்திய மக்களவைத் தேர்தலின் மூலம் முதல்முறையாக 280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதாவது எம்.பி.க்கள் மக்களவையை அலங்கரிக்க உள்ளனர். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52% ஆகும். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 267 எம்.பி.க்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அப்போது அதுவே அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களாகக் கருதப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 263 வேட்பாளர்களும் ஏற்கெனவே மக்களவையில் எம்.பி. பதவி வகித்தவர்களே. கூடுதலாக, 16 பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 பேர் முதல் முறை எம்.பி.க்கள்.
நடிகர்களில் சுரேஷ் கோபி, கங்கனா ரணாவத், ஜூன் மாலியா, சயானி கோஸ், ரச்சனா பானர்ஜி ஆகியோர் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளனர். மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அனில் தேசாய், மிசா பாரதி, பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா, பிரஷோத்தம் ரூபாலா ஆகியோர் இம்முறை மக்களவையின் புதுமுக எம்.பி.க்களாகி உள்ளனர்.
இதுதவிர கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சியிலிருந்து விலகி கட்சித்தாவல் செய்து இம்முறை வெற்றி பெற்று எம்.பி.யானவர்கள் ஒன்பது பேர். கடந்த ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்து இம்முறை தேர்தலில் போட்டியிட்ட 53 பேரில் 35 பேர் வாகை சூடியுள்ளனர்.
Input & Image courtesy: News