லோக்சபாவில் இடையூறு செய்த ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் அதிரடி சஸ்பெண்ட்!
லோக்சபா நடத்துவதற்கு இடையூறு செய்த காரணத்தினால் 4 காங்கிரஸ் எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி துவங்கிய நாட்கள் முதல் இன்று வரையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எவ்வித பணிகளும் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
காலையில் கூட்டத்தொடர் துவங்கினாலும் எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்புவது தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியிருந்தார். அதே போன்று இன்றும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பதாகைகள் ஏந்தி சபாநாயகர் இருக்கை முன்பு கோஷமிட்டனர். அப்போது அவையில் பேசிய ஓம் பிர்லா அவைக்குள் பதாகைகள் எடுத்து வருவதை நிறுத்துமாறு எம்.பி.க்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார். விவாதம் நடத்துவதற்கு அரசு தயாராக இருக்கிறது. அவைக்குள் பதாகை கொண்டு வருவதை எந்த ஒரு எம்.பி.யும் அவை நடவடிக்கையில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படாது. எனவே அவையின் கண்ணியத்தை காப்பாற்றுவது அனைத்து எம்.பி.க்களின் கடமை ஆகும் என்றார்.
இதனை காதில் வாங்கிக்கொள்ளாத எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதியில் வந்து அவையை செயல்பட விடாமல் தடுத்தனர். இதனையடுத்து ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
Source, Image Courtesy: Dinamalar