ரம்ஜான் பண்டிகைக்கு 4000 டன் அரிசி குடுத்தீங்களே, ஆடி மாசம் கூழ் ஊற்ற தானியம் குடுங்கள் - போராட்டத்தில் குதித்த இந்து முன்னணி!

Update: 2021-07-27 01:15 GMT

"ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு 4000 டன் மெட்ரிக் அரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டது, அதேபோல இந்துக்களுக்கும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் வார்க்கும் நிகழ்விற்கு இலவச தானியம் வழங்கிட வேண்டும்" உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

இன்று சென்னை தி.நகரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்பு, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செந்தில் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் செந்தில் கூறியதாவது, "மத ரீதியாக கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்த தமிழக அரசுக்கு நன்றி. ஆனால் அவரை தேச துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என்று கூறினார். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும்,

தமிழகத்தில் தொடர்ந்து மின்சாரக் கட்டணம் உயர்ந்து கொண்டு வருவதால் மின்சார வைப்புத் தொகையும் உயர்ந்திருக்கிறது. இத்தகைய சூழலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மின்சார வைப்புத் தொகையை திரும்பப் பெறவேண்டும் என்றும் கூறினார். மேலும் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உதவித்தொகையை போல இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்" என்றும் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், "ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு 4000 டன் மெட்ரிக் அரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டது, அதேபோல இந்துக்களுக்கும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் வார்க்கும் நிகழ்விற்கு இலவச தானியம் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் திமுக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை 5 ரூபாய் குறைக்கும் என வாக்குறுதி தந்தது போல் தற்பொழுது விலையை குறைக்க வேண்டும்" எனவும் கூறினார்.

Similar News