பா.ஜ.க செயற்குழு கூட்டம்.. தி.மு.க அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட 7 முக்கிய தீர்மானங்கள்..

Update: 2024-07-07 08:32 GMT

சென்னை வானகரத்தில் பா.ஜ.க செயற்குழு கூட்டம் 06.07.2024 அன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.  


இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திமுக அரசைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. எனவே நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். 

  1. முதலாவது, மக்களின் பேராதரவோடு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை முன்னாள் MLA காயத்ரி தேவி வழிமொழிந்தார்.
  2. இரண்டாவது, தமிழகத்தை அச்சுறுத்தும் கள்ளச்சாராய மரணங்களுக்கு CBI விசாரணை தேவை என்ற தீர்மானத்தை சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தை முன்னாள் MLA சம்பத் வழிமொழிந்தார்.
  3. மூன்றாவது தீர்மானமாக முல்லைப் பெரியாற்றில் அணை கட்டும் கேரளா, காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தைக் கண்டித்தும், நதிநீர் உரிமையை மீட்டெடுக்கும் தீர்மானத்தை முன்னாள் MP கே.பி. ராமலிங்கம் முன்மொழிய, அதை ஜி.கே.நாகராஜ் வழிமொழிந்தார்.
  4. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற நான்காவது தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முன்மொழிய, அந்தத் தீர்மானத்தை நடிகர் சரத்குமார் வழிமொழிந்தார்.
  5. ஐந்தாவது தீர்மானமாக போதைப்பொருள் கடத்தலில் காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக் கோரி, முன்னாள் எம்.பி. வி.பி. துரைசாமி முன்மொழிய, அதை அர்ஜுன மூர்த்தி வழிமொழிந்தார்.
  6. நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவ எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட 6-ஆவது தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை விளவங்கோடு முன்னாள் MLA விஜயதாரணி வழிமொழிந்தார்.
  7. இறுதியாக பள்ளிகளில் மத அடையாளங்களை அழிக்க முற்படும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து MLA நயினார் நாகேந்திரன் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை முன்னாள் மேயர் கார்த்தியாயினி வழிமொழிந்தார்.                     

இவ்வாறு ஏழு முக்கியமான தமிழக பிரச்சினைகள் தற்போது தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் சிறப்பு செயற்குழு கூட்டம் என்பதால், இந்தக் கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், கட்சியின் செயல்பாடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

Input & Image courtesy:News

Tags:    

Similar News