ஒருநாள் மழைக்கு மிதக்கும் சென்னை: 8 மாதங்களில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது?-எடப்பாடி பழனிசாமி கேள்வி!
இந்த விடியா அரசு, மே மாதமே ஆட்சிப் பொறுப்பை ஏற்றும், வடகிழக்குப் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்றும், முக்கியமாக சென்னையில் பணிபுரிந்த அதிகாரிகளை முழுவதுமாக பணியிட மாறுதல் செய்ததன் விளைவாக, ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளை எனது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, மாண்புமிகு அம்மாவின் அரசு முன் எச்சரிக்கையாக சென்னை மாநகரத்திற்கு தனியாகவும், மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்களுடனும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம் உட்பட அனைத்து முக்கியமான துறைகளை பேரிடம் மேலாண்மைத்துறையின் கீழ் ஒருங்கிணைத்து, அப்போது முதலமைச்சராக மக்கள் பணியாற்றிய எனது தலைமையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறை அமைச்சர்களுடன் ஆகஸ்ட் மாதத்திலேயே குறைந்தது 5 ஆய்வுக் கூட்டங்களையாவது நடத்துவோம். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தங்கள் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவார்கள். இது தவிர, தலைமைச் செயலாளர் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனும் ஆய்வு செய்வார்.
ஒருநாள் மழைக்கு மீண்டும் மிதக்கும் சென்னை,
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) December 31, 2021
8 மாதங்களில் என்ன சாதித்தது இந்த விடியா திமுக அரசு?
- மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் @EPSTamilNadu அவர்கள் கேள்வி.#ChennaiRain #AIADMK pic.twitter.com/9ZEwZWiZzr
இந்த விடியா அரசு, மே மாதமே ஆட்சிப் பொறுப்பை ஏற்றும், வடகிழக்குப் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்றும், முக்கியமாக சென்னையில் பணிபுரிந்த அதிகாரிகளை முழுவதுமாக பணியிட மாறுதல் செய்ததன் விளைவாக, ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளை எனது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
நேற்று ஒருநாள், பிற்பகல் முதல் பெய்த கனமழையால் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டேரியில் வசித்து வந்த தமிழரசி 70, நேற்று மாலை, நியூ பேரன்ட்ஸ் சாலையில் நடந்து சென்றபோது, அப்பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்ததும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதே போல், புளியந்தோப்பைச் சேர்ந்த மீனா 40, சாலையில் தேங்கிய மழை நீரில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும், மயிலாப்பூரைச் சேர்ந்த லட்சுமணன் 13, என்ற எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் நேற்று மாலை வீட்டின் அருகே தேங்கிய மழை நீரில் கால் வைத்ததும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியினை வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.