தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிப்பு... முழு விவரங்கள்...

Update: 2024-07-28 15:11 GMT

தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிப்பு:

தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கைப் பெறுகிறது, இதில் அரசியலுக்கு இடமில்லை என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 2024-25 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை வெளியீட்டு விழாவின் போது செய்தியாளர்களிடம் அவர் உரையாற்றினார். இதில் அவர்  தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டில் உள்ள குறிப்பிடத்தக்க நன்மைகளையும் எடுத்துரைத்தார். இந்த பட்ஜெட் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும், பிரதமர் மோடியின் இந்தியா 2047 தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளதாகவும் அவர் விவரித்தார்.


ரூ .879 கோடியிலிருந்து ரூ .6,362 கோடியாக உயர்வு:

முன்னதாக, டாக்டர் ஜிதேந்திர சிங், கருத்து உருவாக்குபவர்கள், வர்த்தகத் தலைவர்கள், பட்டயக் கணக்காளர்கள், பொருளாதார அறிஞர்கள் மற்றும் பலருடன் பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் அமர்வை நடத்தினார். ரயில்வே பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் ரூ.6,362 கோடியை பெற்றுள்ளது. 6 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப் பட்டதாலும், 77 மாதிரி அம்ரித் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டதாலும் மாநிலம் பயனடைந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் எட்டு மடங்கு அதிகரித்து, ரூ .879 கோடியிலிருந்து ரூ .6,362 கோடியாக உயர்ந்துள்ளது, இது மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

நீலப் பொருளாதாரத்தின் ஆற்றலைப் பற்றிப் பேசிய அமைச்சர், விரிவான கடற்கரையுடன் கூடிய தமிழ்நாட்டின் கேந்திர அனுகூலத்தை வலியுறுத்தினார். பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலத்தின் கடல்சார் வளங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மீன்வளத் துறை மற்றும் ஆழ்கடல் இயக்கத்திற்கு கணிசமான ஆதரவை இந்த வரவுசெலவுத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. நீலப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், தமிழ்நாட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார பன்முகத்தன்மைக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கும் பாஜக அரசு இந்தத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


பெண்கள் தலைமையிலான நிர்வாகத்துக்கு மோடி அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான முயற்சிகளை தீவிரமாக ஆதரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக, இந்த முக்கியமான நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக ஊக்குவிக்கும் நடவடிக்கையில், நடப்பு பட்ஜெட்டில் ஏஞ்சல் வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று அமைச்சர் எடுத்துரைத்தார். மத்திய பட்ஜெட் 2024-25 இல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பங்கு நிதி ஆதரவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பிரதிபலிக்கிறது, முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது வரி பகிர்வில் 94.95% அதிகரிப்பு மற்றும் உதவி மானியங்களில் 157.58% அதிகரிப்பு. 50,873.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.


பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாநில அரசு கூறுவது பொய்:

நடப்பு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாநில அரசு குற்றம்சாட்டியதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்திற்கு உரிய பங்கு கிடைத்துள்ளது என்று தெளிவுபடுத்தினார். மாநில அரசு வழங்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்று அவர் விமர்சித்தார். நீர் ஆதாரங்களை மாநில அரசு புறக்கணிப்பதையும் அவர் எடுத்துரைத்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மாநிலங்களுக்கு இடையே வளங்களை சமமாக விநியோகிப்பதை நோக்கி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார். பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் பிற மாநிலங்களுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ தமிழகம் பெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார். முடிவில், மத்திய பட்ஜெட் 2024-25 தமிழ்நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு ஒரு வலுவான கட்டமைப்பை அமைக்கிறது என்று அமைச்சர் வலியுறுத்தினார். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News