நாய் கூட B.A பட்டம் பெறலாம்.. ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. வேடிக்கை பார்க்கிறதா தி.மு.க.?
சர்ச்சைக்குரிய கருத்து என்ன?
திமுக மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, 'இன்றைய சூழ்நிலையில் நாய் கூட பி.ஏ. பட்டம் பெறலாம்' என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். கடந்த காலத்தில் தமிழக அரசியலில் இவர் பேசிய பேச்சுக்கள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் தற்போதும் திமுக முன்னாள் எம்.பி-ஆன ஆர்.எஸ்.பாரதி பேசிய சர்ச்சையான கருத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் தேர்வை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் மாணவர் பிரிவு நடத்திய போராட்டத்தின் போது அவர் இத்தகைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தமிழக சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானம்:
நீட் தேர்வுக்கு எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் அணிச் செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமான எழிலரசன் தலைமை வகித்தார். மேலும் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டசபையின் தீர்மானம், சமீபத்திய முறைகேடுகளை காரணம் காட்டி, மருத்துவ சேர்க்கைக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதை காரணமாக வைத்து இந்த போராட்டம் நடை பெற்றது. இதில் ஆர்.எஸ்.பாரதி தனது உரையின் போது, "ஜெயலலிதா இருந்த காலத்திலும் நீட் தேர்வை தமிழகம் எதிர்த்தது. அதற்குப் பின் வந்த அரசுகள் தான் நீட் தேர்வுக்குக் காரணம் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தமிழகத்தை சீரழிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி என்றும் அவர் விமர்சித்தார்.
திராவிட இயக்கத்தை தூக்கிப்பிடித்த ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு:
திராவிட இயக்கம் இல்லை என்றால், சாதிவாரி இடஒதுக்கீடு இல்லை என்றால், இன்று இத்தனை மருத்துவர்கள் உருவாகி இருக்க முடியாது. நாங்கள் படிக்கும் போது பி.ஏ முடித்துவிட்டால் போர்டு எழுதி வீட்டில் மாட்டிக் கொள்வார்கள். ஏனெனில் நான் படிக்கின்ற காலத்தில் ஊரில் ஒருவர் தான் பி.ஏ பட்டம் வாங்க முடிந்தது. ஆனால் இன்றைக்கு நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. இத்தகைய வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் தான் காரணம். ஊழல்கள் காரணமாக நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்த விவாதங்களை மோடி அரசு தவிர்த்து வருவதாகவும், இது தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.