தொடர்ந்து பற்றி எரியும் e-பைக்'குகள், களத்தில் இறங்கிய மத்திய அரசு - நிதின்கட்கரி வெளியிட்ட சூப்பர் தகவல்
மின்னணு இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ஈ-பைக்குகள் ஆங்காங்கே தீப்பற்றி எரிந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக உலா வந்தது, மேலும் அதில் உள்ள பேட்டரி வெடித்து சிதறுவது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்தன இதனால் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவைகளை வாங்கவும், பயன்படுத்தவும் பயனாளர்கள் யோசித்து வந்தனர். இந்த நிலையில் மின்னணு இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் தர வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது, "மின்னணு இருசக்கர வாகனங்கள் சம்பந்தமாக பல்வேறு அசம்பாவிதம் கடந்த இரண்டு மாதங்களில் நடந்துள்ளன. இதில் சிலர் தங்களின் வாழ்க்கையை இழந்து துரதிர்ஷ்டமான ஒன்றாகும், மேலும் பலர் இத்தகைய விபத்துகளில் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வல்லுனர் குழுவை அமைத்து உள்ளோம் தீர்வுகளை வழங்க பரிந்துரை செய்துள்ளோம். குழுவின் அறிக்கைப்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்படும் மின்னணு வாகனங்களுக்கான தர வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.