என்ன ஐ.பி.எல் முதல்வரே? இதுதான் நீங்கள் ஆட்சி பண்ற லட்சணமா? - கள்ளசாராய சாவு விவகாரத்தில் SG சூர்யா

Update: 2023-05-16 11:00 GMT

சாராயம் வித்த காசை எடுத்து கள்ள சாராயத்துல செத்து போனவர்களுக்கு

கொடுப்பீங்களா? முடியலன்னா விட்டுப் போங்க முதல்வரே என கள்ளச்சாராய

விவகாரத்தில் பாஜக மாநில செயலாளர் SG சூர்யா முதல்வர் ஸ்டாலினை கடுமையாக

விமர்சித்துள்ளார்.

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான

எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை

சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும்

மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. குடித்த சில

மணித்துளிகளில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ,

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள

பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ இவர்கள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர்

முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கிவிழ அவர்களும் ஜிப்மர்

மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே சிகிச்சைப் பெற்றுவந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் மற்றும்

ராஜமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்று காலை

பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இப்படி தமிழகம் முழுவதும் உலுக்கிய கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதில்

பலியான உயிர்கள் குறித்து அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் தங்கள்

கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். எந்த நிலையில் பாஜக மாநில செயலாளர்

SG சூர்யா கள்ளச்சாராய மரணம் தமிழக அரசின் கையாலாகாத தனமும், முதல்வரின்

திறனற்ற ஆட்சி நிர்வாகம் தான் இதற்கு காரணமான தனது அறிக்கையில் காட்டமாக

கூறியுள்ளார்.

இது தொடர்பாக எஸ் ஜே சூர்யா வெளியிட்ட அறிக்கையில், 'கள்ளச்சாராய உயிர்

பலிகளுக்கு யார் பொறுப்பு முதல்வரே? பதில் கிடைக்குமா இல்லை உங்களுக்கு

IPL போட்டி தான் முக்கியமா??

தமிழகத்தில் கள்ளச்சாராயம் புழங்குவது கூட தெரியாமல், #IPL போட்டிகளை

காண ஆர்வமாக பல மணி நேரங்களை கிரிக்கெட் மைதானத்தில் செலவிடும் முதல்வர்

திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்!

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? இல்லை வெறும் காட்சியா? எந்த கள்ளச்சாராயம்

வரக்கூடாது என காரணம் கூறி தெருவுக்கு தெரு டாஸ்மாக் மதுபான கடைகளை

கோவில், பள்ளிக்கூடம் என எந்த சுற்றமும் பார்க்காமல் திறந்து, இலக்கு

வைத்து விற்கும் தமிழக அரசுக்கு இன்று கள்ளச்சாராயம் தன் மாநிலத்தில்

சரளமாக புழங்குவது தெரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில்

கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் இறந்ததும், மேலும் பலர் கவலைக்கிடமாக

இருக்கிறார்கள் என்ற செய்தி பகீரென இருக்கிறது.

இறந்த உயிர்களை நம்பி எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? இறந்தவர்களின்

குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது? அரசு கஜானாவில் இருந்து டாஸ்மாக்

சாராயம் விற்ற காசை எடுத்து கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு

இழப்பீடாக கொடுத்து விட்டால் போதுமா? அதுதான் நல்ல அரசா? எதிர்க்கட்சியாக

இருந்த பொழுது டாஸ்மாக் நடத்தக் கூடாது என்றீர்கள், உங்கள் கட்சியினர்

அனைவரும் சேர்ந்து தமிழகத்தில் விதவைகள் அதிகம் என்று ஓலமிட்டார்கள்,

உங்கள் கைக்கூலிகளான சமூக ஆர்வலர்கள் “மூடு டாஸ்மாக்கை மூடு!” என்றல்லாம்

ஒப்பாரி வைத்தார்கள். ஆனால், ஒருபுறம் தமிழக அரசு லேபிள் ஒட்டி மதுபானம்

விற்கிறது, மறுபுறம் லேபிள் ஒட்டாமல் பாட்டில்களில் கள்ளச்சாராயம் சரளமாக

புழங்குகிறது. இதுதானா திராவிட மாடல் ஆட்சியா?

முதல்வரே தயவு செய்து தாழ்மையுடன் தமிழக மக்கள் சார்பாக

கேட்டுக்கொள்கிறோம், அரசியல் குடும்பத்தில் பிறந்த உங்கள் ஆசைக்காக

முதல்வர் பதவிக்கு வந்தீர்கள். ஆசை தீர்ந்துவிட்டது என்றால், பதவி

விலகவும். பாவம், தமிழகம் பிழைத்துக் கொள்ளட்டுமே?

யோசியுங்கள் முதல்வரே!" என SG சூர்யா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராய

மரணங்கள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் நேரில்

சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News