பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யாவுக்கு மீண்டும் சம்மன்.. பின்னணியில் தி.மு.க.வா? நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவர்கள் நேற்று ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு, "உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சி.பி.சி.ஐ.டி போலீசார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்" என்று விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தையும், அது குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குறித்தும் தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுக அரசை கேள்வி கேட்கும் விதமாக தனது கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சனிக்கிழமை நேற்று நேரில் ஆஜரானார்.
மேலும் எக்ஸ் தளத்தில் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட கருத்து குறித்து அவரிடம் சி.பி.சி.ஐ.டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையிலான போலீசார் சுமார் 2 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அழைக்கும்போது வர வேண்டும் எனக்கூறி அவரை அனுப்பி வைத்தனர். இத்தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அருகில் குவிந்தனர். விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.ஜி.சூர்யா கூறும் போது, “உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீசார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துகளை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற விசாரணையை நடத்துகின்றனர்" என்றார். எஸ்.ஜி.சூர்யா அவர்கள் எக்ஸ் வலைதள பதிவிற்காக தமிழக காவல்துறையினரால் சம்மன் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல.