"ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஒரு துரும்பை கூட உங்களால் அசைக்க கூட முடியாது" - சவால் விடும் SG சூர்யா!
சர்வ வல்லமை படைத்த ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியுமே ஒன்றும் செய்ய முடியாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை உங்களால் துரும்பை கூட அசைத்து பார்க்க முடியாது என கூறியுள்ளார் தமிழக பா.ஜ.க ஊடக செய்தித் தொடர்பாளர் SG சூர்யா.
தமிழகத்தில் பல ஆண்டுகளால் 'ஷாகா' எனப்படும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நல் சிந்தனைகள், நேரம், சுத்தம் போன்ற நல் பழக்கவழக்கங்கள், சூர்ய நமஸ்காரம் போன்றி இன்றியமையாத பயிற்சிகள் அங்கு பங்குபெறுபவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த முகாம்கள் தற்பொழுது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது அதில் குறிப்பாக கோவையில் நடைபெற்று வரும் 'ஷாகா' பயிற்சி முகாமிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பயிற்சி முகாம் நடைபெறும் தனியார் பள்ளி வாசலில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் போராட்டம் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதனை காவல்துறை சீரிய முறையில் தடுத்து யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் அங்கு கலவரம் ஏற்படுத்த முயல்பவர்களை அப்புறப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நல்ல முறையில் 90 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை தடை செய்ய சட்டத்தில் இடமில்லை என பா.ஜ.க செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "90 ஆண்டுகளுக்கு மேலாக இந்நாட்டில் நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ் முகாம்களை நடத்த விட மாட்டோம், தடை செய்ய வேண்டும் என புதிதாக பல கோஷ்டிகள் தமிழ்நாட்டில் கிளம்பியுள்ளது. நான் மீண்டும் மீண்டும் சொல்வது தான். சர்வ வல்லமை படைத்த நேரு, இந்திராவே ஒன்றும் செய்ய முடியாத எங்கள் இயக்கத்தை நீங்கள் ஒரு துரும்பளவு கூட அசைத்து பார்க்க முடியாது.
சமூக வலைதள பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் இதை ஜீரணித்து தான் ஆக வேண்டும். தி.மு.க ஆட்சி வந்துவிட்டதால் என்னமோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தமிழகத்தில் தடை செய்து விடலாம் என்ற தொனியில் இவர்கள் பேசுவது நகைப்புக்கு உரியதாக மட்டுமே உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் முகாம்களும், ஷாக்காக்களும் இம்மண்ணில் தொடர்ந்து நடைபெறும். கடந்த மாதம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான முகாம்களும், தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முகாம்களும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதை தடை செய்யவோ, தடுத்து நிறுத்தவோ எந்த சட்டத்திலும் இடமில்லை" என குறிப்பிட்டுள்ளார்.