ஒடிசா கீழ் நடுத்தர குடும்ப தலைவன் To ஒடிசா முதல்வர் : பாஜகவின் எதார்த்தம்...ஒடிசாவில் நெகிழ்ச்சி!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசாவில், பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மையோடு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளது. ஒடிசாவில் பாஜகவின் இந்த வெற்றி ஒரு முக்கிய வெற்றியாகவும், தொடர்ச்சியாக முதல்வராக பதவி வகித்து வந்த நவீன் பட்நாயகிக்கு விழுந்த பெரிய அடியாகவும் பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஒடிசாவின் முதல்வராக மோகன் மாஜி, கடந்த ஜூன் 12-ம் தேதி பதவி ஏற்றார்.
இவரது பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஒடிசாவில் பாஜக தனது வெற்றியை நிலைநாட்டி இருப்பதே அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிற நிலையில், ஒடிசாவின் முதல்வராக பழங்குடியின தலைவரான மோகன் சரண் மாஜியை பாஜக தலைமை தேர்ந்தெடுத்துள்ளது, மிகுந்த கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, தனது கணவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இது குறித்த தகவல்கள் எதுவும் எங்களுக்கே தெரியாது, தொலைக்காட்சி மூலமே நாங்கள் தெரிந்து கொண்டோம் என மோகன் மாஜியின் மனைவி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அதாவது, என்னுடைய கணவருக்கு புதிய பாஜக அரசின் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்து இருந்தேன், அவர் முதல்வர் ஆவார் என ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால் அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது நானும், என் மொத்த குடும்பமும் மிகவும் ஆச்சரியமடைந்தோம். என் கணவர் தன் சொந்த தொகுதிக்கும், மாநில மக்களுக்கும் நல்ல பணிகளை செய்வார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மோகன் மாஜியின் தாயார், எனது மகன் சிறுவயதில் இருந்தே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர். அதனால் கிராம பஞ்சாயத்து தலைவரானார். அதற்குப் பிறகு எம்எல்ஏ, தற்போது முதல்வராக இருக்கிறார். எனது மகன் முதல்வராக அறிவிக்கப்பட்டதை, அவருடைய சொந்த ஊரான ராய்கலாவில் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.