100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் 246 கோடி முறைகேடு - ஆட்டத்தை ஆரம்பித்த எல்.முருகன் !
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது, "இந்த திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 565 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிலுவைத்தொகை ரூ.1,178 கோடியை விடுவிக்க வேண்டும் என்று அக்டோபர் 27-ந் தேதி மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது ஒரு வாரத்தில் நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார்.
ஆனால் 5 நாட்களிலேயே, தமிழக அரசு கோரியதைவிட அதிகமாக ரூ.1,361 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. மத்திய அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.246 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வெறும் ரூ.1 கோடியே 85 லட்சம் வரை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 500 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டபோதிலும், தமிழக அரசு 2 ஆயிரத்து 190 லட்சம் மனித வேலை நாட்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி மாவட்டத்துக்கு ஒரு குறைதீர் அதிகாரி, சமூக தணிக்கை குழு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்று எந்த ஒரு அதிகாரியும் நியமிக்கப்படவில்லை" என எல்.முருகன் கூறினார்.