4 மாதமாக கல்லூரி விரிவுரையாளர்களுக்கு சம்பளம் இல்லை: அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!
பாமக எம்.பி.யும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் திருவரங்கம் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.
திருவரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி 2006-ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்டது. அந்தக் கல்லூரியில் 40 கவுரவ விரிவுரையாளர்கள், 6 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 46 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தையும், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வையும் நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும் என்றும் கோரி கடந்த 6&ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நான்காம் நாளாக போராட்டம் தொடர்கிறது. போராடும் விரிவுரையாளர்களுடன் பேச்சு நடத்த அரசோ, பல்கலைக்கழகமோ முன்வரவில்லை. மாறாக, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்பன போன்ற மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன.
உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அவர்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. அதுவும் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை எனும் சூழலில் அவர்களுக்கு போராடுவதைத் தவிர்த்து வேறு என்ன வாய்ப்பு உள்ளது? அவர்கள் அனைவரும் கடந்த 15 ஆண்டுகளாக அதே கல்லூரியில் அதே சூழலில் பணியாற்றி தங்களின் எதிர்காலத்தைத் தொலைத்தவர்கள். அவர்களால் இனி வேறு வேலைக்கு செல்ல இயலாது எனும் சூழலில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய அரசும், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அவர்களை போராட விட்டு வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல.