தி.மு.க கவுன்சிலர் கணவர் ஆக்கிரமித்த 44 ஏக்கர் ஏரி நிலம் மீட்பு!

Update: 2022-04-28 14:41 GMT

தருமபுரி அருகே உள்ள சவுளூர் பகுதியில் நீர் நிலை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி செய்த அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் தருமபுரி மாவட்டம், சவுளூர் பகுதியில் உள்ள ராமக்காள் ஏரி நீர் வழிபாதையை பல ஆண்டுகளாக 44 ஏக்கர் பரப்பளவு நிலத்தினை தருமபுரி 16வது வார்டு நகரமன்ற உறுப்பினர் சின்னபாப்பாவின் கணவர் மாதேஸ் உட்பட பலர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சவுளூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் இடத்தில் மனு அளித்தனர். இதற்கிடையில் ஆக்கிரமித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்து மீட்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், வருவாய்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை, போலீசார் உள்ளிட்டோர் ராமக்காள் ஏரிக்கு சொந்தமான நீர்வழி பாதை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்ற முற்பட்டனர். அப்போது அதிகாரிகளிடம் திமுக உள்ளிட்டோர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட 44 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

திமுக கவுன்சிலர் கணவர் ஒருவரே பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு பல்வேறு கட்டடங்களை கட்டி அனுபவித்து வந்துள்ள சம்பவம் தருமபுரி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Source: Amma Express

Image Courtesy:Zee News


 



 

Tags:    

Similar News