"50 லட்சம் பணம் தரேன், நமக்கு ஆதரவு கொடுங்க" - தி.மு.க'வின் ஒன்றிய செயலாளர் பேரம் பேசும் ஆடியோ!
"50 லட்சம் பணம் தரேன், உங்க வீட்டுக்காரருக்கு நல்ல பதவி வாங்கி தரேன்" என ஆசை வார்த்தைகள் காட்டி தி.மு.க'வின் ஒன்றியச் செயலாளர், அ.தி.மு.க பெண் கவுன்சிலரிடம் பேரம் பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் 18 வார்டுகள் மொத்தம் உள்ளன, இதில் தி.மு.க நகர செயலாளர் ஜான் கென்னடி மற்றும் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகிய இருவருக்கும் இடையிலான பனிப்போர் காரணமாக அங்கு தி.மு.க வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்களை தி.மு.க'வை சேர்ந்தவர்களே ஆதரித்த காரணத்தினால் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே தி.மு.க கைப்பற்றியது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இடங்கள் மட்டுமே கிடைத்தன.
மேலும் அ.தி.மு.க 9 வார்டுகளிலும், பா.ஜ.க, தே.மு.தி.க தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றன. இருப்பினும் பேரூராட்சித் தலைவர் பொறுப்பை கைப்பற்ற தி.மு.க தரப்பில் குதிரை பேரம் நடத்தப்படுவதாக தொலைபேசி ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆடியோவில் தி.மு.க'வின் ஒன்றிய செயலாளரும், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான பி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு பணம் மற்றும் பதவி ஆசை கட்டி பேசுவதுபோல் உரையாடல் வெளியாகியுள்ளது. பெண் கவுன்சிலர் ஒருவரிடம் அவர் பேசும் ஆடியோ வைரலாக பரவுகிறது, அதில் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், "நானும் சபாநாயகரும் சேர்ந்து ஒரு லிஸ்டை கொடுத்து அவர்களை போட்டியிட வைக்க முடிவு செய்திருந்தோம், எனக்கு எங்க மாவட்டச் செயலாளருக்கும் ஆகாது, நான் மாவட்ட பஞ்சாயத்து தலைவரான பொழுது எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்துச்சு அதனால நான் அவரை எதிர்த்து அரசியல் பண்றேன். எனக்கு எதிராக அவர் நான் சொன்ன ஆட்களுக்கு சீட்டு கொடுக்கல! இப்போ உங்களுக்கு நல்ல வாய்ப்பு வந்திருக்கு இது திரும்ப கிடைக்காது உங்களை துணைத்தலைவர் ஆக்கிவிடுறேன். 40 இல்லனா 50 லட்சம் பணம் கொடுக்குறேன். உங்க வீட்டுக்காரருக்கும் ஏதாச்சும் நல்ல பதவி வாங்கி கொடுத்துடுறேன்" என தி.மு.க'வின் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசும் ஆடியோ வைரலாக பரவி வருகிறது. அதற்கு அந்தப் பெண் கவுன்சிலர், "பணம் இன்று வரும் நாளை போகும் ஆனால் மானம்தான் பெரிது! பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு ஓட்டு போட்ட மக்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்" என எதிர் கேள்வி கேட்பதாக அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.
பல இடங்களில் நாங்கள் மக்கள் ஆதரவுடன் தான் ஜெயித்தோம் என தி.மு.க'வும் அதன் தலைமையும் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே தி.மு.க'வின் உள்ளடி வேலைகள் இதுபோன்ற ஒவ்வொன்றாக வெளிவருவது தி.மு.க'வுக்கு மக்கள் அளித்த ஆதரவு போல் தெரியவில்லை மாறாக தேர்தலில் இன்னும் பல உள்ளடி வேலைகள் நடந்திருக்கும் என்றே தோன்றுகிறது.