சசிகலாவிற்கு உதவி செய்த 7 பேர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கம்.!
சசிகலாவிற்கு உதவி செய்த 7 பேர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கம்.!
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன சசிகலா நேற்று பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பினார். அப்போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டு வந்தது. இந்த கொடியை கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அகற்றியது. இதனை தொடர்ந்து சசிகலாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரை அளித்தார்.
அந்த காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அதே போன்று மற்றவர்களான கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், சூளகிரி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சம்பங்கி, சந்திரசேகர ரெட்டி (எ) போகிரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, பிரசாந்த்குமார், நாகராஜ், ஆனந்த் ஆகியோர்களும் சசிகலாவிற்கு அதிமுக கொடி கட்டப்பட்ட வாகனங்களை அளித்தார்கள்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் மேற்கண்ட அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.