இன்று 76வயதில் அடியெடுத்து வைக்கிறார் இளைஞர் எம்.ஆர்.காந்தி.
நாகர்கோயில் பகுதியில் எம்.எல்.ஏ-வாக இந்தமுறை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இந்த இளைஞர் இதுவரை 6 முறை எம்.எல்.ஏ தேர்தலில் களம் கண்டு தோற்றவர். 7'வது முறையாக தற்பொழுது வெற்றியை பெற்றுள்ளார். கடந்த 1980-ம் ஆண்டு முதல் காந்தி தேர்தலில் போட்டியிட்டு வந்தது இவரின் தன்னம்பிக்கைக்கும், தளராத மன உறுதிக்கும் எடுத்துக்காட்டாகும். 1980, 1984, 1989, 2006, 2011, 2016, என 6 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் இவர். இதில் மூன்று முறை நாகர்கோவில் தொகுதியிலும், இரண்டு முறை குளச்சல் தொகுதியிலும், ஒரு முறை கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிட்டார். நகராட்சி சேர்மன் பதவி வந்தாலே 'ரேஞ்ச்ரோவர்' வாங்கலாமா என யோசிக்கும் தற்கால அரசியல் பிரமுகர்களின் வாழ்க்கையை பார்த்து பழகிய இந்த தலைமுறை வாழ் இளைஞர்களுக்கு தோல்வியிலும் துவளாத இவர் குணமும், வெற்றியிலும் மாறாத இவர் எளிமையும் கண்டிப்பாக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
இவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியின் களம் அவ்வளவாக பா.ஜ.க'விற்கு சாதகம் கிடையாது. வரலாற்றில் இதுவரை இவரையும் சேர்த்து இரண்டு பேர் மட்டுமே இந்த கன்னியாகுமாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். ஒருவர் சி. வேலாயுதம், இவர் 1996 தேர்தலில் வெற்றிபெற்றார். மற்றொருவர் எம்.ஆர்.காந்தி, தற்போது வெற்றி பெற்றிருக்கிறார். அந்தளவிற்கு தமிழகத்தின் எல்லைப்பகுதியான அம்மாவட்டத்தில் பா.ஜ.க சிந்தாந்த எதிர்ப்பாளர்கள் அதிகம். தமிழகத்தில் அதிக மத மாற்றங்கள் நடைபெறும் மாவட்டங்களில் முதன்மையானது, கடற்கரை ஓரங்களில் விநாயகர் கோவில் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக சிலுவை இருக்கும். ஓட்டரசியலில் அங்குள்ள திருச்சபைகளின் பங்கு பெரும்பான்மை வாய்ந்தவை அவர்கள் முடிவு செய்வதே அங்கு விழும் வாக்குகள். இவை அனைத்தையும் கடந்து பா.ஜ.க'வின் சித்தாந்தவாதியாக காலில் செறுப்பு கூட அணியாமல் இந்த 76 வயது இளங்கன்று வீதி வீதியாக அலைந்து இன்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ'வாக சட்டமன்றம் சென்றுள்ளது.
வெற்றி பெற்றவுடன் பெயருக்கு தொகுதிக்கு வந்து நன்றி கூறிவிட்டு சென்னை எம்.எல்.ஏ விடுதியில் ஆண்டிற்கு 10 மாதங்கள் படுத்திருக்கும் எம்.எல்.ஏ'க்கள் மத்தியில், கட்சி தலைமையின் கன் பார்வை படாதா என கட்சி தலைவர்களின் வீட்டு வேலைகளை செய்ய கூட தயாராக இருக்கும் எம்.எல்.ஏ'க்கள் மத்தியில், தன் தொகுதியில் உள்ள இயற்கை வளங்களை எப்படி அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ளை அடிக்கலாம் என நினைக்கும் எம்.எல்.ஏ'க்கள் மத்தியில், 'அதான் அப்பா இருக்காரே பார்த்துப்பார்' என நினைக்கும் வாரிசு எம்.எல்.ஏ'க்கள் மத்தியில் இந்த கட்டை பிரம்மச்சாரி எம்.எல்.ஏ காந்தி தொகுதியில் நிழற்குடை விழுந்தாலும் வந்து நிற்பார், மழையில் வீடுகள் இடிந்தாலும் வந்து மக்களுடன் நிற்பார், சாலை சரியில்லை எனில் அதனை சரி செய்ய ஏற்பாடு செய்துவிட்டு சாலை இடும் இடத்தில் செருப்பு கூட அணியாமல் குடை பிடித்தபடி நிற்பார், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலாகட்டும், குரு பூர்ணிமா தினமாகட்டும் இருகரம் குவித்தபடி இந்த மனிதரை பார்க்கலாம்.