9 பேர் காவல்துறை கட்டுப்பாட்டில் மரணம், முதலமைச்சர் பதவியை துறந்துவிடுங்கள்- ஸ்டாலினுக்கு சாடும் அர்ஜூன் சம்பத்!

Update: 2022-06-13 10:48 GMT

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து காவல்துறை விசாரணை, மற்றும் பாதுகாப்பில் கைதிகளின் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று (ஜூன் 12) திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணையின் போது மரணமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

விடியல் தருகிறேன் என கோடிகளில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி ஆட்சி பீடத்தை கைப்பற்றிய முதுலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை கட்டுப்பாட்டில் கைதிகள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது.

2021 ஜூலை 7ம் தேதி கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் 45 வயதுடைய பிரசாத் உயிரிழந்தார்.

2021 ஆகஸ்ட் 24ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மேற்கு காவல் நிலையத்தில் 35 வயதுடைய சரவணன் உயிரிழந்தார்.

2021 செப்டம்பர் 4ம் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் 42 வயதுடைய மணிகண்டன் உயிரிழந்தார்.

2021 டிசம்பர் 12ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் 19 வயதுடைய மணிகண்டன் உயிரிழந்தார்.

2022 ஜனவரி 13ம் தேதி நாமக்கல் மாவட்டம் கிளைச்சிறை காவல் நிலையத்தில் 45 வயதுடைய பிரபாகரன் உயிரிழந்தார்.

2022 பிப்ரவரி 5ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் 44 வயதுடைய சுலைமான் உயிரிழந்தார்.

2022 பிப்ரவரி 14ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலையத்தில் 38 வயதுடைய தடிவீரன் உயிரிழந்தார்.

ஏப்ரல் 18ம் தேதி சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 25 வயதுடைய விக்னேஷ் உயிரிழந்தார். தற்பொழுது 12ம் தேதி ஜூன் மாதம் திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழந்தார்.

இப்படி 9 கைதிகள் தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை கட்டுப்பாட்டில் உயிரிழந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலட்சிய ஆட்சியின் லட்சணத்தை இது காட்டுகிறது. மேலும், இவை அனைத்தும் முதலமைச்சர் கவனத்திற்கு போகிறதா? முதலமைச்சர் தனி உலகத்தில் வாழ்கிறாரா? என சந்தேகம் ஏற்படுகிறது.

கடந்த மே மாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ''விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. காவல் துறையினர் இது போன்ற சம்பவங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்'' என கூறியுள்ளார். ஆனால் அதையும் மீறி தற்பொழுது நடந்த சம்பவம் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என்பதை காட்டுகிறது.

இதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ''ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு 2 நாள் தூங்கவில்லை'' என கூறியிருந்தார். வசனங்களால் மக்களை ஏமாற்றும் காலம் உங்கள் தந்தையார் திரு.மு.கருணாநிதி அவர்களுடன் முடிந்துவிட்டது முதலமைச்சரே! வெறும் வசனங்களால் விடியல் தர முடியாது. செயல் வேண்டும்! உங்களால் காவல்துறையையும் மற்றும் பிற துறை அதிகாரிகளையும் கட்டுக்குள் வைத்து வேலை வாங்க முடியவில்லை எனில முதலமைச்சர் பதவியை துறந்து விடுங்கள். வேற்று வசனத்தை பேசி மக்களை ஏமாற்றும் வேலையே இனியாவது விட்டுவிட்டு வேலையை பாருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே! இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News