அண்ணாமலை எஃபெக்ட் - ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு ஆவினில் குவிந்த ஆர்டர்கள் !
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு நிறுவனமான ஆவினில் ஆர்டர் குவிந்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு, காரம் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு அரசு நிறுவனமான ஆவினில் இனிப்பு வாங்காமல், வெளிச்சந்தையில் கடந்த காலங்களில் இனிப்புகள் வாங்கப்பட்டன. கடந்த ஆண்டுக்கூட போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு இனிப்புகள் ரூ.500 என்ற வீதத்தில் வெளிச்சந்தையில் வாங்கப்பட்டது. குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆர்டரை வழங்கவும் அதன்மூலம் கமிஷன் அடிக்கவுமே டெண்டர் நிபந்தனை விதிக்கப்பட்டதாக சர்ச்சையானது. இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். அது பல தி.மு.கவினரை தூங்க விடாமல் செய்தது.
விளைவு அரசு துறை நிறுவனமான ஆவினில் இனிப்பு வாங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவும் துறை செயலாளர்களுக்குக் கடிதம் எழுதினார். அரசு ஊழியர்களுக்கு அரசு நிறுவனமான ஆவினில் இனிப்பு வாங்கும்படி அதில் அறிவுறுத்தியிருந்தார்.
இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் ரூ. 3 கோடி ரூபாய்க்கு ஆவினில் ஆர்டர் குவிந்தது. இதுகுறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் திருச்சியில் கூறுகையில், "கறந்த பால், கறந்தபடி தாய்ப்பால் போன்று சுத்தமான பாலில், கூட்டுறவு சங்கத்திலிருந்து பெறப்படும் பொருட்கள், ராஜஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து தீபாவளி இனிப்பு வகைகளை தயாரித்து வருகிறோம். சென்னையில் மட்டும் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இது ஆவின் வரலாற்றில் உச்சம்" என கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமல் அந்த ஊழல் புகாரை எழுப்பவில்லை எனில் இந்த வரலாற்று சாதனை சாத்தியமாகி இருக்காது.