அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி: பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக கூட்டணி.!

அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி: பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக கூட்டணி.!

Update: 2020-11-11 09:09 GMT
கொரோனா நோய் தொற்று காலத்திலும் பலவேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பீகாரில் 3 கட்டமாக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.

எப்போதும் இல்லாத வகையில் பீகார் சட்டசபை தேர்தலை இந்த முறை நாடே இந்த முறை உன்னிப்பாக கவனித்தது. கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் முடங்கிய நிலையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக வுக்கு மக்கள் மத்தியில் என்ன அபிப்பிராயம் என்பதை சொல்லும் முடிவாக இது இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக கூறின. ஆனால் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் உள்ளிட்ட ஆர்ஜேடி கூட்டணிக்கு ஆதரவாக வந்ததால் நாடு முழுவதும் முடிவை மிக ஆவலுடன், பரபரப்புடன் மக்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், நேற்று  நவம்பர் மாதம் 10- ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் நடந்து வருகிறது.

ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் பரபரப்பான நிலையில் ரிசல்ட் வெளியானது. அதாவது இருகட்சி கூட்டணிகளும் சொற்ப வித்தியாசத்தில் மாறி, மாறி முந்தி வந்தன. இந்நிலையில் 11 மணிக்கு மேல் பா.ஜ.க, கூட்டணி முன்னேற்றத்தை தொடங்கியது. பல தொகுதிகளில் கட்சிகளிடையே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் காணப்பட்டதால் மிக மெதுவாக, எச்சரிக்கையாக எண்ணப்படுவதால் முடிவுகள் அறிவிக்க நள்ளிரவு ஆகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் நள்ளிரவில் 243 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முடிவுகள்படி ஆளும் பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக 74 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான  ஐக்கிய ஜனதா தளம் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது. கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாஜகவும் கூட்டணியில் உள்ள அதன் கட்சிகளும் சேர்ந்து 125 இடங்களை பிடித்து அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஆர்.ஜே.டி கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 110. இதில் ஆர்.ஜே.டி. - 75, காங்கிரஸ் -19, இடதுசாரிகள் - 16 ஆகும்.

இதர கட்சிகளான ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை 5, லோக் ஜனசக்தி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை 1, பி.எஸ்.பி. வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை 1, சுயேச்சை வெற்றி பெற்றுள்ள தொகுதி எண்ணிக்கை1 ஆகும். அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமாக 3 இடங்களைப் பெற்ற நிலையில் மீண்டும் அங்கு பாஜக ஆதரவில் நிதிஷ்குமார் ஆட்சியே தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  

Similar News