வடம் பிடித்து இழுக்கப்படும் வம்பு, தக்கலை அருகே சிக்கலை உருவாக்கும் திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளும் தி.மு.க. அரசு மீண்டும், மீண்டும் தமிழர்களின் இறை நம்பிக்கையாளர்களின் பெருமையை, சகிப்புத்தன்மையை சோதித்துக் கொண்டேயிருக்கிறது. ஆன்மீகத் தலைவர்களையும், ஆதீனங்களையும், இறையடியார்களையும், திருக்கோயில் பொறுப்பாளர்களையும், தன்னார்வலர்களையும் தொடர்ந்து ஆளும் தி.மு.க. அரசு அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் இன்று கன்னியாகுமரியில் சர்ச்சை.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள தொல்காப்பியத்தில் சேரநாட்டு ஏரகம், என்றும் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையில் திருவேரகம் என்றும் பாடப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமிக்க குமாரகோயில் என்ற முருகன் கோயிலில் வைகாசி தேரோட்டம் இன்று நடைபெற்றது.
வடம் பிடித்து இழுக்கப்படும் வம்பு, தக்கலை அருகே சிக்கலை உருவாக்கும் திமுக ..
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) June 11, 2022
- மாநில தலைவர் திரு.@annamalai_k #KAnnamalai pic.twitter.com/oPZYz0h1Sk
இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை சட்டத்திற்கும், ஆகம விதி முறைகளுக்கும் முரணாக, இறை நம்பிக்கை இல்லாத மாற்று மதத்தைச் சேர்ந்த, அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்ட தி.மு.க.வினர் தேர்வடம் இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க வந்தபோது பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொதுமக்களை மிரட்டி பக்தர்களை விரட்டி சீருடை அணியாத காவல்துறையினரை பயன்படுத்தி, வடம் பிடித்து இழுத்த தி.மு.க.வினர், இரண்டு தேர்களையும் நகர்த்தி, தெருவிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராடிய பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். மதச்சார்பின்மை என்ற பெயரிலே ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும், மறுபக்கம் தமிழரின் பாரம்பரிய மரபுக்கு எதிர்ப்பாகவும் செயல்படுவது ஆட்சிக்கு அழகல்ல. தெருவெல்லாம் மேடை போட்டு நாத்திகவாதம் பேசும்போது எந்த ஆத்திகரும் வந்து தடுப்பதில்லை. அதே போல ஆளும் கட்சிக்கு எப்போது இறை நம்பிக்கை இல்லையோ அப்போதே ஆலய வழிபாடும் பக்தர்களுக்கு இடையூறு செய்யாமல் ஒதுங்கியிருக்க வேண்டாமா? மேலும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய அரசே அத்துமீறல் செய்யலாமா?