கண்ணியமற்ற தலைப்புகள்.. தொலைக்காட்சி விவாதங்களில் அ.தி.மு.க. பங்கேற்காது.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அதிரடி அறிவிப்பு.!
தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் இனிமேல் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் இனிமேல் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட மாபெரும் பேரியக்கம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
புரட்சித் தலைவரின் ஆட்சியின் நீட்சியாக தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களுக்காகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவுமே வாழ்ந்து மறைந்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அதே எண்ணத்தோடு இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் வழிநடத்தி இருக்கிறார்கள்.
அதைப் போலவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வகுத்துத் தந்த பாதையில் சிறிதும் தடம் மாறாமல் அரசியல் களத்தில் நாங்கள் பயணித்து வருகிறோம்.
மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்சினைகள் பல இருக்கின்ற போது, அதைப்பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள், அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், மனம்போன போக்கில் ஊடக அறத்திற்குப் புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலும், விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது.