கேரளாவுக்கு முல்லை பெரியாறு அணை உரிமையை விட்டு கொடுத்த தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் !
முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து 5 மாவட்டங்களில் நவம்பர் 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து 5 மாவட்டங்களில் நவம்பர் 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம். அணையில் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் (நவம்பர் 2) 138.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,952 கனஅடியாக உள்ளது. தமிழக பகுதிகளுக்கு 2,305 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கேரள நீர் பாசனத்துறை அமைச்சர் மற்றும் அம்மாநில அதிகாரிகள் அணையில் ஷட்டர் பகுதியை திறந்து விட்டு வீணாக தண்ணீரை வெறியேற்றுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், 517 கனஅடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று 4வது நாளாக 2,348 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் மின் உற்பத்தி செய்த பின்னர் வீணாக கேரள பகுதியில் உள்ள கடலில் கலக்கிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளை, அந்தக் கட்சியினர் அடகு வைப்பதும், தங்கள் சுயநலனுக்காகவும், அரசியல் அழுத்தங்களினாலும் தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
தென் தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது வைகை ஆற்றில் ஓடி வரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் ஆகும். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய நிலப் பரப்பில், மக்கள் பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீரின்றி அல்லற்பட்டு வறுமையில் வாடி, அவற்றின் விளைவாக சமூகம் நலிவடைந்து இருந்ததைக் கண்டு அந்த மக்களின் துயர் துடைப்பதற்கென்று, மறைந்த மனிதாபிமான பெருந்தகை, போற்றுதலுக்குரிய பென்னி குவிக் அவர்கள் தனது சொந்த செல்வத்தையும் வழங்கி கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணையாகும்.