மக்களின் எதிர்ப்பை சரிகட்ட 'விடியா அரசு' செய்யும் சோதனை! - அ.தி.மு.க. தலைமை கடும் விமர்சனம்!
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் வீடு உள்ளிட்ட 28 இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் போலீசார் சோதனை என்ற பெயரில் கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் போலீசார் சோதனை என்ற பெயரில் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக அதிமுக தலைமை கூறியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு அதிமுக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் வீடு உள்ளிட்ட 28 இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் போலீசார் சோதனை என்ற பெயரில் கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத விடியா அரசு, மக்களின் எதிர்ப்பு உணர்வை, கசப்பான மன ஓட்டத்தை மாற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பெயரில் போலீசாரை ஏவி விட்டு பல்வேறு இடையூறுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
ஆட்சிக்க வந்த 120 நாட்களில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியை தொடர்ந்து வீரமணி வீட்டிலும் போலீசாரே முடிவு செய்த 28 இடங்களிலும் சோதனை என்ற பெயரில் ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தில், சந்தேகப்படும் மாவட்டங்களில் அதிமுகவினரின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் விதமாக, முக்கிய நிர்வாகிகளை செயல்பட விடாமல் தடுக்கும் நோக்கத்தில் வீரமணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இது பழிவாங்கும் படலமாகவே கருதப்படும் என்று பொதுமக்களுக்கும் தெரியும்.
இதற்கு எல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சட்டத்தின் துணை கொண்டு எதிர்கொள்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar