விவசாயப் பேரணியா, காலிஸ்தான் வன்முறை கும்பலா? கொதிக்கும் மக்கள்!

விவசாயப் பேரணியா, காலிஸ்தான் வன்முறை கும்பலா? கொதிக்கும் மக்கள்!

Update: 2021-01-27 06:15 GMT

பல்லாண்டுகளாக பலரும் எதிர்பார்த்த, அனைத்துக் கட்சிகளும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த, பல நிபுணர்களும், விவசாய சங்கங்களும் ஆதரவளித்த வேளாண் சட்டங்கள் சமீபத்தில் மத்திய பா.ஜ.க அரசாங்கத்தால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

 ஆனால் தற்பொழுது ஏற்கனவே இருக்கும் முறை மூலம் அதிக லாபம் சம்பாதிக்கும் இடைத்தரகர்களும், மற்ற மாநிலங்களை விட குறைந்த பட்ச ஆதார விலையில் பங்கை அதிகமாக அனுபவிக்கும் பஞ்சாப் மாநில விவசாயிகளும்,  இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதரவு பெறும் இப்போராட்டம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் ஊடுருவப்பட்டது

 60 நாட்களுக்கும் மேல், 11 கட்டங்களுக்கும் மேலாக மத்திய அரசாங்கம் இவர்களுடன் எல்லாவிதத்திலும் பேச்சுவார்த்தை நடத்தியது. 

ஒன்றரை வருடங்கள் விவசாய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது நிறுத்தி வைக்கப்படும் என்றும் எந்தெந்த ஷரத்துகள் பிரச்சனைக்கு உரியது என்பதை பேசி சரிசெய்யலாம் என்று வாக்குறுதி அளித்த போதும், உச்ச நீதிமன்றம் 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து சட்டத்தின் நிறைகுறைகள் விவாதிக்கப்படும் என்று கேட்டுக் கொண்ட பிறகும், எந்தவித பேச்சு வார்த்தைக்கும் உடன்படாமல் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் போராடி வருகிறார்கள். 

சட்டமியற்றுவதும், அதை செயல்படுத்துவதும் மக்கள் தேர்ந்தெடுத்த பாராளுமன்றத்தின் உரிமை என்றும், சில நூறுபேர் வீதிகளில் இறங்கி தங்கள் சுயலாபத்திற்காக போராடினால் சட்டத்தை திரும்ப பெற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று சமூக ஊடகங்களில் மக்கள் கடந்த பல நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.

 ஆனால் அரசாங்கம் மிகுந்த பொறுமையுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்தது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று தாங்களும் டெல்லியில் ஒரு பேரணி நடத்துவோம் என்று அவர்கள் கோரிக்கையை முன்வைத்த தொடங்கினர்.

 யோகேந்திர யாதவ் உள்ளிட்ட சில தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தன்னை விவசாயிகள் தலைவராக காட்டிக் கொண்டனர். இந்த  பேரணி அமைதியாக நடக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாலும் குறிக்கப்பட்ட நேரத்தில்,  அனுமதிக்கப்பட்ட சாலைகள் வழியாக பேரணியை நடத்த டெல்லி காவல்துறை ஒப்புதல் வழங்கியது.

 ஆனால் குறிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக அனுமதிக்கப்படாத வழிகளில் பேரணி டெல்லி செங்கோட்டையை நோக்கி முன்னேறத் தொடங்கியது. அவர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். மிகப்பெரிய வாளையும் சுழற்றிக்கொண்டு வழியில் இருந்த தடுப்புகளை எல்லாம் டிராக்டர்கள் மூலமாக தகர்த்து எறிந்தனர். அவர்கள் செல்லும் பாதையை தடுப்பதற்காக வைத்திருந்த பேருந்துகளை கூட சூறையாடத் தொடங்கினர்.

 அசுர வேகத்தில் டிராக்டர்கள் வந்ததால் காவல்துறையினரும் பத்திரிக்கையாளர்களும் அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓட வேண்டியதாயிற்று.  பெண் காவலர்களை கூட சூழ்ந்துகொண்டு தாக்க தொடங்கினர். 

 

மிகவும் பொறுமை காத்த டெல்லி போலீசார் வேறு வழியில்லாமல் டிராக்டரை நிறுத்த தாங்களே முன் அமர்ந்து தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது. இத்தனையும் மீறி அவர்கள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். 

 சுதந்திர தினம் அன்று பிரதமர் தேசியக் கொடியை ஏற்றும் கம்பத்தில் சீக்கிய மத கொடியையும் காலிஸ்தான் பிரிவினைவாத கொடியையும் ஏற்றினர். விவசாய போராட்டத்தில் இத்தகைய மத கொடிகளை ஏற்ற வேண்டிய அவசியம் என்ன?  என்று கேட்க வேண்டிய ஊடகத்துறையினர் அவர்கள் தேசியக் கொடியை கீழே இறக்கவில்லை தேசியக்கொடியை அவமதிக்கவில்லை என்றெல்லாம் இதற்கு சப்பைகட்டு கொடுக்க ஆரம்பித்தனர். இதன்பிறகு தேசியக்கொடியை கீழே தூக்கி எறியும் வீடியோக்கள் தெளிவாக வலம் வர ஆரம்பித்தன. 

 இன்னும் ஒருபடி மேலே சென்று, தடுப்பை உடைக்க வேகமாக வந்த டிராக்டர் கவிழ்ந்து விழுந்து அதன் ஓட்டுநர் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். ஆனால் போலீசார் சுட்டதால் அவர் மரணமடைந்ததாகவும் அவருடைய தியாகம் வீண் போகாது என்று விவசாயிகள் கூறியதாகவும் இந்தியா டுடே பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், நேரலையிலும் ட்விட்டரிலும் பொய் பரப்பத் தொடங்கினார். 

ஒரு கலவரம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய போலி செய்திகளை பரப்புவது எந்த அளவு ஆபத்தானது என்று உணர வேண்டிய பத்திரிக்கையாளர்களே அதை வளர்க்கத் தொடங்கினர். 

 மற்றொரு பத்திரிகையாளர் ரோகினி சிங், காலிஸ்தான் அல்லது சீக்கிய கொடிபறக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தேசியக் கொடி செங்கோட்டையில் காட்டப்படுவதாக கதை கூற ஆரம்பித்தார். 

ஏற்றிய கொடிகள் இறக்கப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் இல்லை. தேசியக்கொடிக்கு பதிலாக ஒரு மதக்கொடி ஏறியது அதுவும் குடியரசு தினத்தன்று நடந்ததை, மக்கள் பெரும் அவமானமாக கருதி இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

 பாகிஸ்தான் சமூக ஊடகங்கள் மற்றும் கனடாவில் இருக்கும் காலிஸ்தானிகள் இதைப் பெரிதாக கொண்டாடி சந்தோஷத்தை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது டெல்லி எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராடும் படி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார் டெல்லி ஆணையர்.

. மக்களிடம் கொஞ்சநஞ்சம் இருந்த ஆதரவும் அபிமானத்தையும் என்று போராட்டக்காரர்கள் இழந்துள்ளனர் என்பதே உண்மை.

 பின்னால் இருந்த விவசாய தலைவர்கள், தூண்டிவிட்ட ஊடகத்துறையினர், நிதியளித்த காலிஸ்தானிகள் ஆகிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Similar News