நாளை கூடும் அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம்.. விழாக்கோலம் பூண்ட சென்னை வானகரம்.!

நாளை கூடும் அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம்.. விழாக்கோலம் பூண்ட சென்னை வானகரம்.!

Update: 2021-01-08 14:38 GMT

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை (9ம் தேதி) காலை 8.50 மணிக்கு கூடுகிறது. இதனையொட்டி அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில் அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. செயற்குழு கூட்டம் மட்டும் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு சென்னை, வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதனையொட்டி வானகரம் முழுவதும் கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் பணிகளை கட்சியின் மூத்த நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழக சட்ட சபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் நாளை நடைபெறும் பொதுக்குழு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக கூட்டணி நிலைப்பாடு பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் பாமக, தேமுதிக, தமாகா, உட்பட எந்தெந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம் பெறச் செய்வது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. நாளை மாலை கூட்டணி பற்றிய அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Similar News