அமித் ஷா 21-ஆம் தேதி தமிழகம் வருகை - ரஜினியுடன் சந்திப்பா?

அமித் ஷா 21-ஆம் தேதி தமிழகம் வருகை - ரஜினியுடன் சந்திப்பா?

Update: 2020-11-16 09:04 GMT
மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக வரும் 21- ஆம் தேதியன்று சென்னை வருகிறார். 

சென்னை வரும் அமித் ஷா கவர்னர் மாளிகை சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாதவரம் - சோழிங்கநல்லூர் 2-ஆம் கட்ட மெட்ரோ ரெயில் புதிய வழித்தடப் பணிகளை தொடக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும், ஒரு தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும் மாநில பா.ஜ.க நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். பா.ஜ.க மாநில உயர்நிலைக் குழு கூட்டமும் அப்போது கூடும் என கூறப்பட்டுள்ளது. எனவே இன்னும் 6 மாதங்களுக்குள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனைகள் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

கட்சி நிகழ்ச்சி முடிந்ததும் அதன்பிறகு அவர் தேர்தல் உறவுகள் குறித்தும் மற்ற விவகாரங்கள் குறித்தும் முதல்வர் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்துடன் பேசலாம் என தெரிகிறது. மேலும் ரஜினிகாந்துடன் பேசி அவருடைய மனநிலை குறித்து அவர் அறிய ஆவலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனால் அவர் ரஜினி வீட்டுக்கு செல்லவும் வாய்ப்புண்டு எனக் கூறப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித் ஷாவின் வருகை என்பது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் சில அரசியல் கட்சித் தலைவர்களை அமித் ஷா சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை நடத்துவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வேல் யாத்திரையை தொடர்வோம் என பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், "அமித் ஷா வருகையின்போது விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அமித் ஷாவின் வருகை எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும். தைரியம், புத்துணர்வை அளிப்பதாக இருக்கும். அமித் ஷா வருகையால் அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் போகப்போக தெரியும் என்றார். அதேசமயம் அமித் ஷாவின் வருகை எதிர்க்கட்சியினருக்குப் பயத்தைக் கொடுப்பதாக அமையும் என்றார் முருகன்.

Similar News