"அண்ணாமலை" எதிர்க்கட்சி யார்? என்று தெரியாத அளவிற்கு தனது தைரியமான பேச்சால் உயர்ந்து நிற்கிறார் ! - பாராட்டி தள்ளும் ஜெ உதவியாளர் பூங்குன்றன்
"தமிழகத்தில் எதிர்க்கட்சி யார்? என்று தெரியாத அளவிற்கு தனது தைரியமான பேச்சால் வளர்ந்தும், தான் சார்ந்த கட்சியை வளர்த்தும் வருகிறார் அண்ணாமலை" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து கூறியுள்ளார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.
இது குறித்து தனது முகநூல் பதிவில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் பூங்குன்றன். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "அண்ணாமலை, அண்ணாந்து பார்க்கின்ற மலை, அதைப் போலவே இன்று இந்த அண்ணாமலையும் உயர்ந்து நிற்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சி யார்? என்று தெரியாத அளவிற்கு தனது தைரியமான பேச்சால் வளர்ந்தும், தான் சார்ந்த கட்சியை வளர்த்தும் வருகிறார். அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடம் புதிய எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. தமிழகத்தில் அரசியலுக்கு வரும் புதியவர்களை பிரதமரின் ஆளுமையும், அண்ணாமலையின் தன்னம்பிக்கையும் ஈர்க்கும் என்பதே சத்தியம். காதலித்த பணியை கைவிட்டு, மக்கள் பணியை காதலிக்கத் தொடங்கியிருக்கும் அண்ணாமலைக்கு எனது பாராட்டுக்கள்.
அ.தி.மு.க தொண்டர்கள் தலைமையிடம் இன்று எதிர்பார்ப்பது புரட்சித்தலைவரின் சாதுர்யத்தையும், புரட்சித்தலைவியின் வீரத்தையும்தான். எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டுமென்றால் தவறுகளை தயங்காமல் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஆளுங்கட்சிக்கும் மக்கள் பணியில் ஆசைவரும், நல்லதை செய்வதில் கவனம் வரும், போட்டிபோட்டு செய்ய உற்சாகம் பிறக்கும். இன்று எதிர்க்கட்சியில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சென்னையில் மழை வெள்ளத்தில் சென்று உதவிகளை செய்து வருகிறார்கள். மகிழ்ச்சி. தலைவர்களின் வழியில் நிர்வாகிகளும் செயல்பட வேண்டுமல்லவா? தொண்டர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. பயன்படுத்த நிர்வாகிகளுக்குத்தான் மனமில்லை என்பதும் புரிகிறது. அண்ணா மலை வளர்கிறது என்றால் யாரோ தேய்ந்து கொண்டிருக்கிறார்கள்" என அண்ணாமலையை சுட்டிக்காட்டி அ.தி.மு.க'வினருக்கு உற்சாகமூட்டியிருக்கிறார் பூங்குன்றன்.